சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி நிர்வாகம், புதிதாக வேறு ஒரு இடத்தில் கிளை பள்ளியை தொடங்க புதிய அனுமதி பெற வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரே நிர்வாகத்தின் கீழ் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றதோ அத்தனை பள்ளிகளுக்கும் தனித்தனியே அங்கீகாரம் பெற வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இதனை மாற்றி தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்ற வகையில் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள் வாரியம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி," ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளியின் சார்பில் வேறு ஒரு இடத்தில் அமைக்கப்படும் கிளை பள்ளிக்கு இனி புதிதாக அங்கீகாரம் வாங்க தேவையில்லை. ஒரு நிர்வாகத்தின் கீழ் வேறு இடத்தில் செயல்படும் பள்ளியானது 1200 சதுர மீட்டர் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளியை மட்டுமே தொடங்க முடியும்.
1600 சதுர மீட்டர் வரை இடமிருந்தால் பத்தாம் வகுப்பு வரையும் , 2400 சதுர மீட்டர் வரை இருந்தால் 12-ம் வகுப்பு வரை நடத்தலாம். பள்ளி செயல்படத் தேவையான இட வசதிகள் இருந்தால் கிளைப் பள்ளிகளுக்கு தனியே அங்கீகாரம் பெற தேவையில்லை.
இதையும் படிங்க: மருத்துவக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க அறிவுறுத்திய அமித்ஷா இந்தியை ஏன் திணிக்க வேண்டும்? அண்ணாமலை கேள்வி!
ஆனால் நிலத்திற்கான சான்றிதழ். தீ விபத்து தடுப்பு சான்றிதழ். கட்டட உறுதிச் சான்றிதழ், தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான சான்றிதழ் ஆகியவற்றை கிளைப் பள்ளிகளுக்கு தனித்தனியே சமர்பிக்க வேண்டும். விதிமுறைப்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கான விகிதாசாரம் பின்பற்ற வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகளின் சட்டங்களை பின்பற்ற வேண்டும்,"என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு மாநிலத்துக்குள் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது மாநில அரசின் தடையின்மை சான்று தேவையில்லை என்று சிபிஎஸ்இ வாரியம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இதே போல இப்போது வெளியிடப்பட்ட அறிவிப்பும் தனியார் கல்வி நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.