தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் ஞாயிற்றுக்கிழமை இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் என்னென்ன? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

4 August India Olympics Schedule: பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று ஞாயிற்றுகிழமை இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் மற்றும் அட்டவணை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்..

Etv Bharat
PARIS OLYMPICS AUGUST 4 SCHEDULE (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 5:30 AM IST

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் 9வது நாளில் இந்திய வீரர்கள் பல்வேறு போட்டி தொடர்களில் பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று (ஆக.3) துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தையில் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் மகளிர் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் தோல்வியை தழுவினார். இன்று 9வது நாளில், இந்தியா பதக்கம் வெல்லும் வய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதியில் இன்று விளையாடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகும். பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் 9வது நாளில் என்னென்ன போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறித்த முழுமையான அட்டவணையை காணலாம்.

துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 25 மீட்டர் ரேபிட் பயர் ஆடவர் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் விஜய்வீர் சித்து மற்றும் அனிஷ் பன்வாலா கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் மகளிர் பிரிவில், ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சௌஹான் ஸ்கீட் தகுதிப் போட்டியின் கலந்து கொள்கின்றனர். இதில் ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பயர் தகுதிச் சுற்று மதியம் 12:30 மணிக்கும், ஸ்கீட் மகளிர் தகுதி சுற்று மதியம் 1 மணி நடைபெற உள்ளது.

ஹாக்கி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 9வது நாளில் இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குரூப் பிரிவில் இந்தியா மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி கண்டுள்ளது. இந்தியா அணி லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது, அர்ஜென்டினாவுடனான ஆட்டம் டிரா ஆன நிலையில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. தற்போது கால்யிறுதிக்கு முன்னேறி உள்ள இந்திய அணி, இன்று கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. இந்தியா vs கிரேட் பிரிட்டன் இடையிலான ஆண்கள் காலிறுதி ஆட்டம் பிற்பகல் 1:30 மணி நடைபெறுகிறது.

தடகளம்:இந்தியாவிற்கான தடகளத்தில், பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் சுற்று 1ல் பருல் சவுத்ரி தனது முதலாவது முயற்சியில் இன்று விளையாடுகிறார். அதே நேரத்தில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் கலந்து கொள்கிறார். இருவரும் தடகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் முதல் சுற்றில் பருல் சவுத்ரி மதியம் 1:35 மணிக்கு களம் காணுகிறார். அதேபோல் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்று போட்டி மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது.

குத்துச்சண்டை: பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா போர்கஹைன், சீனாவின் லி குவெனை இன்று எதிர்கொள்கிறார். அதேபோல் மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவின் ரவுண்ட் 16வது சுற்றில் நார்வேயின் சன்னிவா ஹாஃப்ஸ்டெட்டை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் லவ்லினா போர்கஹைன். தற்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

முன்னதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா போர்கஹைன் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லவ்லினா போர்கஹைன் விளையாடும் காலிறுதி ஆட்டம் பிற்பகல் 3:02 மணிக்கு நடைபெறுகிறது.

பேட்மிண்டன்: பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் ஒரே பதக்க நம்பிக்கையான லக்சயா சென் இன்று அரையிறுதி போட்டியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை எதிர்கொள்கிறார். உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் 22 வயதான லக்சயா சென், அரையிறுதியில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் விக்டர் ஆக்செல்சனை எதிர்கொள்கிறார்.

முன்னதாக, காலிறுதிப் போட்டியில் சீன தைபேயின் சௌ தியெனை, லக்சயா சென் வீழ்த்தி இருந்தார். இந்த ஆட்டம் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது

பாய்மரப் படகு:ஒலிம்பிக் போட்டியின் 9வது நாளான இன்று, ஆண்களுக்கான பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா சார்பில் தடகள வீரர் விஷ்ணு சரவணன் கலந்து கொள்கிறார். அதேபோல் பெண்களுக்கான பாய்மரப் படகுப் போட்டியிலும் நேத்ரா குமணன் விளையாடுகிறார். இருவரும் ரேஸ் 7 மற்றும் ரேஸ் 8ல் பங்கேற்கின்றனர். இதில் விஷ்ணு சரவணனின் ஆட்டம் பிற்பகல் 3:35 மணிக்கும், நேத்ரா குமணனின் போட்டி மாலை 6:05 மணிக்கு நடைபெறுகிறது.

இதையும் படிங்க:முகமது சிராஜ்க்கு டிஎஸ்பி பதவி! ஐதராபாத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்! - Mohammed Siraj DSP

ABOUT THE AUTHOR

...view details