பாரீஸ்:பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் ஏழாவது நாள் இந்தியாவுக்கு ஒரு கலவையாக இருந்தது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அதனுடன் இந்திய ஹாக்கி அணியும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று (ஆக.3) எட்டாவது நாளின் முழுமையான அட்டவணை மற்றும் இந்திய வீரர்களின் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.
கோல்ப்: இந்தியாவிற்கான மூன்றாவது சுற்று கோல்ப் ஆட்டங்களில் ஆண்களுக்கான தனிநபர் ஸ்டோக் பிளே ரவுண்ட் 3 சுற்றில் சுபங்கர் சர்மா மற்றும் ககன்ஜித் புல்லர் விளையாடுகின்றனர். உலக தரவரிசையில் 173வது இடத்தில் உள்ள சுபாங்கர் இதுவரை 17 சர்வதேச போட்டிகளில் விளையாடியு, அதில் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரம் சர்வதேச தரவரிசையில் 295வது இடத்தில் உள்ள ககன்ஜீத் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சுபங்கர் சர்மா மற்றும் ககன்ஜித் புல்லர் ஆட்டம் மதியம் 12:30 மணிக்கு நடைபெற உள்ளது.
துப்பாக்கிச் சுடுதல்: 25 மீட்டர் பிஸ்டல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாகர் பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியில் இன்று விளையாடுகிறார். அதனுடன், ஆண்களுக்கான ஸ்கீட் விளையாட்டு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் தகுதி பெற்றால், மேலும் ஒரு பதக்கம் நாட்டுக்கு கிடைக்கும்.
அதேபோல், ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகிய இந்தியா வீராங்கனைகள் ஸ்கீட் மகளிர் தகுதிச் சுற்றில் இன்று களமிறங்குகின்றனர்.
ஸ்கீட் மகளிர் தகுதி சுற்றில் ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சவுகான் மதியம் 12:30 மணிக்கு விளையாடுகின்றனர். அதேபோ ஸ்கீட் ஆண்கள் தகுதிச் சுற்றில் அனந்த் ஜீத் சிங் நருகா மதியம் 1 மணிக்கு விளையாடுகிறார். மேலும் 25மீ பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டி மனு பாகெர் மதியம் 1 மணிக்கு களம் காணுகிறார்.
வில்வித்தை: பெண்களுக்கான தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்றில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி மற்றும் ஜெர்மனியின் மிச்செல் குரோப்பனை எதிர்கொள்கிறது. அதேபோல் பஜன் கவுர் இந்தோனேசியாவின் தயானந்தா கொய்ருனிசாவை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், மேலும் இரண்டு பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைக்கலாம்.
பெண்களுக்கான தனிநபர் சுற்று 16 முதல் பதக்கப் போட்டிகள் மதியம் 1 மணிக்கும், தீபிகா குமாரி விளையாடும் பெண்களுக்கான தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று மதியம் 1:52 மணிக்கு நடைபெறுகிறது. பஜன் கவுர் கலந்து கொள்ளும் பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று பிற்பகல் 2:50 மணிக்கு தொடங்குகிறது.
பாய்மர படகு போட்டி: தடகள வீரர் விஷ்ணு சரவணன் இந்தியாவுக்கான ஆடவர் பாய்மர படகு போட்டியில் கலந்து கொள்கிறார். இந்தியாவுக்கான பெண்களுக்கான பாய்மரப் படகுப் போட்டியில் நேத்ரா குமணன் கலந்து கொள்கிறார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் எட்டாவது நாளில் இருவரும் ரேஸ் 5 மற்றும் ரேஸ் 6இல் பங்கேற்கிறார்கள்.
இதில் விஷ்ணு சரவணன் கலந்து கொள்ளும் ஆண்களுக்கான பாய்மரப் பந்தயம் பிற்பகல் 3:45 மணிக்கும், நேத்ரா குமணன் பங்கேற்கும் பெண்களுக்கான பாய்மரப் படகு பந்தயம் மாலை 5:55 மணிக்கும் நடைபெறுகிறது.
குத்துச்சண்டை: ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் மெக்சிகோவின் அல்வாரெஸ் மார்கோ அலோன்சோ வெர்டேவுடன் இந்திய நிஷாந்த் தேவ் விளையாடுகிறார். இந்த போட்டியில் நிஷாந்த் வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார். இந்த ஆட்டம் மதியம் 12:02 மணிக்கு நடைபெறுகிறது.
இதையும் படிங்க:52 ஆண்டுகளுக்கு பின் சாதனை! பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி கால் இறுதிக்கு தகுதி! - paris olympics 2024