சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டிக்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி20 விளையாடுகிறது. இன்று (ஜன.22) முதல் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பையில் என மொத்தம் 5 போட்டிகளில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. அதேபோல இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (ஜன.25) நடைபெறும் இப்போட்டிக்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: "மக்களிடம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென விஜய் நினைக்கிறாரா?" - வானதி சீனிவாசன் கேள்வி!
முன்னதாக, ஐபிஎல் 2023 போட்டி நாட்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் இலவச டிக்கெட்டுகளை வழங்கியது. மேலும், முக்கியமான போட்டிகளின் போது ரசிகர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் இந்த கூட்டு முயற்சி எடுக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ''சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரின் இரண்டாவது போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் வருவதற்கும் போட்டியை பார்த்து விட்டு திரும்ப செல்வதற்கும் இலவசம்'' என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 செப்டம்பரில் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் முறையாக ஒரு சர்வதேச போட்டி நடக்கவுள்ளது. மேலும், 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளை பந்து போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை இன்று புதன்கிழமை எதிர்கொள்கிறது. இந்தத் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.