வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியை தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கினால், அதனை வரவேற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
உலக பணக்காரர்களின் முதன்மையானவரான எலான் மஸ்க் இப்போது டொனால்டு டிரம்ப் அரசின் நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த குழுவின் தலைவராக இருக்கிறார். டிக்டாக் செயலி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அதிபர் டொனால்டு டிரம்ப், "எலான் மஸ்க் டிக்டாக் செயலியை வாங்க விரும்பினால், அவர் வாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,"என்றார்.
அமெரிக்க சட்டத்தின்படி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தமது டிக்டாக் செயலியின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வேண்டும் அல்லது அமெரிக்காவில் அந்த செயலி தடை செய்யப்படுவதை சீன நிறுவனம் எதிர்கொள்ள வேண்டும்.
அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற உடன், டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி டிக்டாக் செயலியை தடை செய்வதை 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்பட வேண்டும் எனில், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அதன் 50 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அறிக்கையை காப்பி, பேஸ்ட் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி; முதலமைச்சர் விமர்சனம்!
ஜோபைடன் அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டாக் செயலி மூலம் அமெரிக்கர்களை சீனா உளவு பார்க்கிறது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த நிலையில் டிரம்ப்பிடம் பேசிய செய்தியாளர்கள், உங்கள் போனில் டிக்டாக் செயலி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். இல்லை. ஆனால், இதனை இப்போது எனது போனில் டவுன்லோடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன், என்று கூறினார்.
டிக்டாக் செயலியை தடை செய்வதை 75 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கும் நிலையிலும் கடந்த சனிக்கிழமையன்று டிக்டாக் செயலி சிறிது நேரம் இயங்கவில்லை என்று அமெரிக்கர்கள் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை டிக்டாக் செயலி இயங்கத்தொடங்கியது. அமெரிக்காவில் மொபைல் போன்களில் ஏற்கனவே டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பவர்களுக்கு மட்டுமே அது இயங்குகிறது. இப்போது கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் நிறுவனத்தின் போன்களில் டிக்டாக் செயலி இல்லை. இதனிடையே, டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு விற்க சீன நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கடந்தவாரம் வெளியான செய்திகளை டிக்டாக் செயலி நிறுவனர் மறுத்திருக்கிறார்.