சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைத்தார். அப்போது, முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நடும் பணியையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாவட்டத்தில் 6 துறைகள் சார்பில் ரூ.164 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ. 51 கோடியில் 45 முடிவுற்ற திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ரூ. 89 கோடியில் சிவகங்கையில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்கவும், திருப்பத்தூரில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கும், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட ரூ. 30 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசு 505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்றும் எஞ்சிய வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "முந்தைய அதிமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இன்னொரு கட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கையை காப்பி, பேஸ்ட் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். இதிலிருந்தே எடப்பாடி பழனிசாமி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டை பற்றாக்குறை மாநிலமாக முந்தைய அதிமுக அரசு மாற்றியது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!
எடப்பாடி பழனிசாமி பதவிக்காக டெல்லி சென்றவர். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் எடப்பாடி பழனிசாமி வயிற்று எரிச்சலில் உள்ளார் என்றும் ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசின் நிதியில் இருந்து செயல்படுத்தி வருகின்றோம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கீழடி தொல்லியல் மாதிரியை நினைவு பரிசாக வழங்கினார்.
காப்பி பேஸ்ட் சர்ச்சை:
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த ஜகபர் அலி இறப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டார். இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், இடம் பெற்றிருந்த பெரும்பாலான வார்த்தைகள் அண்ணாமலையின் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.