சென்னை: பிக்கில் பால் (world pickle ball) என்பது டேபிள் டென்னிஸ் மற்றும் டென்னிஸ் ஆகிய 2 போட்டிகளையும் இணைத்து விளையாடுவது போன்று இருக்கும். தற்போது இந்த விளையாட்டு பிரபலமாகி வருகிறது. மேலும், இந்த தொடர் ஜனவரி 24-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஆறு அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில், சென்னை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், சென்னை பிக்கில் பால் அணியை சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடிகை சமந்தா வாங்கியுள்ளார்.
அந்த அணிக்கு சென்னை சூப்பர் சாம்ப்ஸ் (chennai super champs) என்று பெயர் சூட்டப்பட்டு அந்த அணிக்கான ஜெர்சி அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா தங்கள் அணிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பிக்கில் பால் விளையாடினார். அதன் பின்னர் உரையாற்றிய சமந்தா, ''ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல மாதங்கள் இந்த பணிக்காக திட்டமிட்டு இருந்தேன்.
இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியை பார்க்க வருபவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!
சவுகரியமாக உணர்கிறேன்
தற்போது சென்னைக்கு நடிகையாக வராமல் ஒரு தொழில் முனைவராக வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் சென்னைக்கு வரும்போதெல்லாம் சவுகரியமாக உணர்கிறேன். சென்னை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இதில் Never ever give up என்ற மனநிலையை சென்னை தான் எனக்கு கொடுத்தது.
அனைவராலும் ஆட முடியும்
பிக்கில் பால் ஆட்டத்தை அனைவராலும் ஆட முடியும்; சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்போட்டியை விளையாடலாம். உடல் ஆரோக்கியத்திற்காகவும், மன வலிமைக்காகவும் அனைவரும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும். இந்த போட்டியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முதல் படியை ஆரம்பித்து வைத்துள்ளேன்.
அதை மாற்ற வேண்டும்
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உடல் தகுதியுடன் இல்லை என குறிப்பிட்டுள்ளது, அதை மாற்ற வேண்டும். இது போன்ற விளையாட்டுகளில் அனைவரும் பங்கேற்று உடல் தகுதியுடன் இருக்கலாம். நான் சிறு வயது முதலே படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டியதால் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாத நபராகவே இருந்துவிட்டேன்.
நானே பிக்கில் பால் விளையாட்டை விளையாடுகிறேன் என்றால் அனைவராலும் விளையாட முடியும். அதேபோன்று நான் எதை செய்தாலும் பெரிய கனவோடு நம்பிக்கையோடு தான் செய்வேன், அப்படி செய்வதால் அது எனக்கு ஒரு வேலையாக தெரிந்தது இல்லை. நான் செய்யும் இந்த வேலையை மிகவும் ஆர்வத்தோடு செய்து வருகிறேன்'' என தெரிவித்தார்.