சென்னை: எனது பாதை புரட்சியாளர் பிரபாகரன் பாதை. இந்த பாதையில் எனக்கு பெரியார் தேவையில்லை என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசுவதாக கூறி பெரியார் இயக்கங்கள் மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையில் உளள சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், "எனக்கு எதிராக போராட்டம் நடத்தும் இவர்கள் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த தங்கை ஸ்ரீமதி மரணத்திற்கோ, டங்ஸ்டன் விவகாரத்திலோ, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திலோ, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தோ போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? 60 ஆண்டுகளாக பெரியாரை வைத்து நீங்கள் காட்டி வரும் படம் தேவையா?
திமுக என்ன செய்தது?: 32 இயக்கங்கள் சேர்த்து போராட்டம் நடத்தும் இவர்கள் 300 பேரை கூட சேர்க்க முடியவில்லை. பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் எண்ணிக்கை தான் அதிகம். சமூகநீதி என்று பேச உங்களுக்கு தகுதி இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க துணிவு இருக்கிறதா? மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று ஆளும் திமுக சொல்கிறது. தொடர்ச்சியாக திமுக 18 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இருந்தது. அப்போதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் என்ன செய்தீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பை மாநிலங்களே எடுத்துக்கலாம் என்று உச்சநீதிமன்றமே சொல்லியும் ஏன் அதை எடுக்கவில்லை. கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொடுக்கும் போது எங்கே இருந்தீர்கள்? அமைச்சரவையில் இருந்த போது என்ன செய்தீர்கள்?

ஆளுநர் இஸ்லாமிய சிறை கைதிகளுக்கு எதிராக கையெழுத்து போடமாட்டார் என்று தெரிந்து, ஆளுநர் போடவில்லை நாங்கள் என்ன செய்வது என ஆளும் திமுக கேட்கிறது. ஆளுநர் கையெழுத்து போட்டால் தான் விடுதலை செய்ய முடியும் என்று சொல்லி ஓட்டு கேட்டிருக்கலாமே? அப்பாவி சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டது யார்? எல்லாம் ஏமாற்று வேலை. தெரியாமல் நடக்கவில்லை திட்டமிட்டே நடந்தது.
நான் பெரியாரை அவதூறாக பேசிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நான் ஆதாரத்தை உரிய நேரத்தில் சொல்கிறேன். நீங்கள் வழக்கு போட்டீர்கள். நீங்கள் நீதிமன்றத்தில் என்னை நிறுத்தும் போது பதில் சொல்கிறேன். எத்தனையோ பேர் பேசிய போது வராத கோபம் நான் பேசிய போது மட்டும் ஏன் வருகிறது? எனக்கு எதிராக போராடியவர்கள் என் வீட்டை முற்றுகையிடவில்லை. அருகில் உள்ள கடையை தானே முற்றுகையிட்டீர்கள்?
இலவச விளம்பரம்: போராட்டத்தைக் கண்டு பயந்து ஓடி விடுவேன் என்று நினைக்கிறீர்களா? பெரியாரை அதிகப்படியாக தமிழகத்தில் விமர்சித்த கட்சி திமுக தான். இந்தி எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் முதலில் இந்தி பள்ளியை திறந்தது பெரியார் தான். நாங்கள் எதையும் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. நானும் எங்க அண்ணன் பிரபாகரனும் இருப்பதை வெட்டி ஒட்டியதாக சொல்கிறீர்களே? அதற்கு ஆதாரம் காட்டுங்கள். எனக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இவர்கள் என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தான் போவார்கள். சீமான் ஒழிக, ஆரிய கைக்கூலி என்று என்னை எப்படி விமர்சித்தாலும் அது எனக்கு இலவச விளம்பரம்தான். அதற்காக அண்ணன் திருமுருகன் காந்தி உள்ளிட்டோருக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் திட்டம் ரத்துன்னு அண்ணாமலை சொன்னா எப்படி? அமைச்சர்ல சொல்லணும்! - அரிட்டாபட்டி மக்கள் கேள்வி
உங்களுக்குள் இருக்கும் தீண்டாமையை முதலில் ஒழித்து விட்டு வெளியே வாருங்கள். பெரியாரிஸ்ட் எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் படம் இருக்கிறதா? அப்பறம் ஏன் இரண்டு பேரும் ஒன்று என்று சொல்கிறீர்கள்? இழந்த உரிமையை பிச்சை கேட்டு பெற முடியாது போராடிதான் பெற முடியும். எனக்கு எதிராக பேசும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தை நாட வேண்டும். வரலாறு கூட தெரியாமல் அந்த கட்சியில் எப்படி அமைப்பு செயலாளராக அவர் இருக்கிறார்? என்று தெரியவில்லை. முடிந்தால் வழக்கு போட்டு நீதிமன்றத்தில் என்னை நிறுத்துங்கள். நாங்கள் தமிழர்கள். வழக்கு போட்டு தடுக்க முடியுமா? யார் திராவிடம் என்று கேட்டால் பதில் இல்லை. முதல்வரையும் துணை முதல்வரையும் பேச சொல்லுங்கள். நீங்கள் ஏன் முந்திக்கொண்டு வருகிறீர்கள்?
பெரியார் ஒன்றும் செய்யவில்லை: நாம் தமிழர் என்ற பெயரை பார்த்தால் பயமாக இருக்கிறது தானே? முற்றுகையிடுவது எனக்கு பழக்கமில்லை. நேரடியாகதான் சண்டை போடுவேன். என்னை எதிர்ப்பவர்கள் எல்லோரும் என் எதிரிகள் அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் என் எதிரி. எனக்கு எதிராகப் போராடுபவர்கள் திமுகவுக்கு ஆதரவாக போராடுபவர்கள் தான். திராவிட கொள்கையா? தமிழ் தேசிய கோட்பாடா? நீங்கள் பெரியாரைப் பற்றி பேசுங்கள், நான் பிரபாகரனை பற்றி பேசுகிறேன். பெரியார் ஒன்றும் செய்யவில்லை என்று பேசுகிறேன். எது சரி என மக்கள் முடிவு செய்யட்டும்.
ஆனால் மக்களிடம் ஒட்டு வாங்க பணம் கொடுக்க கூடாது. ஒரு நேர்மைமாளராக கொள்கை வழியில் நல்லாட்சி கொடுக்கும் தலைவருக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து வாக்கை பறிக்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? மூன்றரை ஆண்டுகளாக செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேளுங்கள். அவர்கள் என்னை சிதைப்பதாக நினைத்து என் கட்சியை செதுக்குகிறார்கள். நான் பெரியாரைப் பற்றி பேசியதும் தொடர்ந்து என்னைப் பற்றியே பேசுகிறார்கள். தேர்தல் பணி சிறப்பாக போய்க் கொண்டு இருக்கிறது. எஸ்.வி.சேகர் மகனுக்கு மயிலாப்பூரில் சீட் தாருங்கள் என்று மறைமுகமாக திமுகவிடம் கேட்கிறார்.
இது புரட்சியாளர் பிரபாகரன் பாதை. இந்த பாதையில் எனக்கு பெரியார் தேவையில்லை. பெரியார் எப்படி இப்படி எல்லாம் பேசலாம்? என்னை முட்டாள், காட்டு மிராண்டி என்று சொல்ல அவர் யார்? திராவிடத்திற்கு ஒரே ஆள் பெரியார் தான். ஆனால் எனக்கு எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறேன். நீங்கள் சொன்னால் நான் நிறுத்தி விடுவேனா? தமிழனை இழிவாக பேசியது காட்டு மிராண்டி என பெரியார் பேசியது தவறுதான் என மொத்த பெரியாரிஸ்டுகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.