சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து நேற்றிரவு முதல் அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பிறகு ஞானசேகரனை, சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தேவைப்பட்டால் மீண்டும் ஞானசேகரனை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்று எப்படி குற்ற சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த விசாரணையில் இதேபோன்று வேறு எந்த மாணவியாவது ஞானசேகரனால் பாதிக்கப்பட்டு அவர்கள் புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஞானசேகரன் இடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு காரணமாக இருந்த காவல் துறையினர் இடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இன்று விசாரணையை நடத்தினர்.
ஏற்கெனவே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த ஒரு வழக்கும் முதல் தகவல் அறிக்கை வெளியாகிறது குறித்து மற்றொரு வழக்கு என இரண்டு வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர், எழுத்தர், கணினியில் பதிவேற்றம் செய்தவர் உள்ளிட்ட அனைவரிடமும் இன்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.