கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.வெற்றி இலக்கான 133 ரன்களை வெறும் 12.5 ஓவர்களிவேயே எட்டி இந்திய அணி வீரர்கள் அசத்தினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரி்ல் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் மொத்தம் 132 ரன்களே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரை தவிர, பிற அனைத்து வீரர்களுக்கு இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ஓவருக்கு 10 ரன்கள் வீதம் குவித்து வந்தனர். இருப்பினும் சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானதால், இந்திய அணியின் ஆட்டத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால், அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 34 பந்துகளில் 79 ரன்களை குவித்து அணியின் எளிதான வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு துணையாக களத்தில் நின்று ஆடிய திலக் வர்மா தன் பங்கிற்கு 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 12.5 ஓவர்களிலேயே இந்திய அணி தமது வெற்றி இலக்கான 133 ரன்களை எட்டியது.
4 ஓவர்கள் வீசி 23 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்சர் 2 விக்கெட்களை எடுத்தார்