கோபே:மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் உள்ள கோபே நகரில் கடந்த மே 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று கோபே 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர்களுக்கான T63 பிரிவு உயரம் தாண்டுதல் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் இப்போட்டியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த எஜ்ரா ஃப்ரெச் மற்றும் சாம் க்ரீவ் ஆகியோர் முறையே 1.85 மீட்டர் உயரம் மற்றும் 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் வருண் சிங் பாடி 1.78 மீட்டர் உயரம் தாண்டி 4-ம் இடத்தை பிடித்துள்ளார். மேலும், இந்தியாவைச் சேர்ந்த ராம்சிங்பாய் படியார் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “புகழுக்கு ஒரு மகத்தான பாய்ச்சல். ஜப்பானின் கோபேயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் T63 பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவோம்” என வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் 2024 'பாரா அத்லெட்டிக்ஸ்' தடகள விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில், இன்று உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
மாரியப்பன் தங்கவேல் இந்த வெற்றியை ஈட்டுதற்காக மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவர் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “ஜப்பானின் கோபேயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 இறுதிப் போட்டியில் 1.88 மீட்டர் சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டிற்கு மென்மேலும் பெருமைசேர்க்க வாழ்த்துகிறேன். நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் மாரியப்பன் தங்கவேலு உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம்மை எல்லாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தமிழருக்கு பெருமை தான்.. எப்படி தெரியுமா? - TAMILNADU CRICKETERS IN IPL