விசாகப்பட்டிணம்:இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-க்கும் 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணத்தில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதத்தின் உதவியால் 396 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 253 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டினையும் பறிகொடுத்தது. பின்னர் இந்திய அணி 143 ரன் முன்னிலையுடன் அதன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய நிலையில், சுப்மான் கில் சதத்துடன் 255 ரன் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன் சேர்த்து இருந்தது. ஜாக் கிராலி 29, ரெஹான் அகமது 9 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று (பிப். 5) 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. துவக்க ஆட்டக்காரர் ஜேக் கிராலி ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த படி இருந்தன.
ஒருகட்டத்தில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் கிராவ்லியும் 73 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து நடையைக் கட்டினார். இதனால் 69.2 ஓவரில் இங்கிலாந்து அணி 292 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டினையும் இழந்தது. இதனால் இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சாளர்களில் பும்ரா 3 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது.
முன்னதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழத்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின் இதுவரை 96 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதற்கு முன் பி.எஸ். சந்திரசேகர் (95 விக்கெட்), அனில் கும்பிளே (92 விக்கெட்) ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5வது இடத்திற்கு சறுக்கியது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மீண்டும் முன்னேறி 2வது இடத்தில் உள்ளது.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஆஸ்திரேலியா (55%) முதல் இடத்திலும், இந்திய அணி (52.77%) இரண்டாவது இடத்திலும், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் (50%) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. பாகிஸ்தான் (36.66%) 6வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (33.33%) 7வது இடத்திலும், இங்கிலாந்து (25%) 8வது இடத்திலும், இலங்கை கடைசி இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தல்!