சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் இன்று (ஐனவரி 2) சென்னையின் நான்காவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், பூங்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
கண்காட்சியில் என்ன உள்ளது? இந்த மலர் கண்காட்சியில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, பாய்ன்செட்டியா, பென்ஸ்டிமான், டேலியா, கல்வாழை, சூரிய காந்தி, வெர்பினா, ஆன்டிரினம், ஜெரேனியம், பென்டாஸ், வயலா, ஜெர்பரா, ஆர்கிட்ஸ், நித்தியகல்யாணி, ப்ரிமுலா, வெட்சி, கேலா லில்லி, ஆஸ்டர், டெய்சி ஆகிய 50க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, இரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்டிலைன், அக்லோனிமா, எராந்திமம், ஃபிலோடென்ட்ரான் போன்ற பல்வேறு அலங்கார இலைத்தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டு பெறும் வழி: இந்த மலர் கண்காட்சியானது இன்று (ஜனவரி 2) முதல் ஐனவரி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுச்சீட்டு வழங்கப்படும். மேலும் https://tnhorticulture.in/spetickets/ என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வண்ணமயமாய் மனதை வருட வரும் சென்னை மலர் கண்காட்சி! எப்போது தெரியுமா?
பொங்கல் பரிசு தொகுப்பில் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பேட்டி: இந்நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் மற்றும் 30 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்த மலர்க கண்காட்சி நடைபெறும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
மலர்கள் கொண்டு பல வகையான வடிவங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை வருவதால் கூடுதல் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.