திண்டுக்கல்: தைப்பூசம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதம் நிறைவடைந்ததை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.11) பழனி முருகன் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அப்போது, அண்ணாமலை காவடி சுமந்தபடி திரு ஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டுத் தொடர்ந்து, அடிவாரம் பாத விநாயகர் கோவில் படிவழிப் பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்றார். அப்போது அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து படிவழிப் அனுப்பி வைக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தைப்பூசத்திற்கு வாழ்த்துக்கள்: பின், சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்துக் கூறியது பெரிய விஷயமல்ல, பிரதமர் பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழ் மொழியில் கோஷங்கள் எழுப்பியபடி வாழ்த்தி இருக்கிறார். அது தான் பாஜக ஆட்சியின் மகிமை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அது கூடச் சொல்லவில்லை.
லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையாக விரதமிருந்து வெகுதூரம் பாதயாத்திரையாக முருகனை வழிபட வருவார்கள் என அறிந்தும் தமிழக அரசு எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை. பக்தர்களுக்குத் தேவையான நடைபாதை, கழிவறை, தண்ணீர் வசதி என ஒன்றும் இல்லை.
அமைச்சர் காந்தி: அமைச்சர் காந்தி மீது சென்ற ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு விடுத்திருந்தேன், ஆனால் அதற்குப் பொய்யாக பதிலளிறிக்கை விடுத்துவிட்டு மீண்டும் அவர்களது ஊழல் போக்கைப் பின்பற்றி வருகின்றனர். இந்த ஆண்டு பாலிஸ்டரை கொண்டு வந்து வேட்டி சேலை செய்கிறார்கள். அதைத் தடுத்த ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்தைப் பணி மாற்றம் செய்துள்ளார்கள்.
இதையும் படிங்க: 'தமிழிசூழ் மாமதுரை' - மதுரையை பாதுகாக்கப்பட்ட தொன்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்" - கரு பழனியப்பன்
அரசியல் ஆலோசகர்: தவெக தலைவர் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அரசியலில் மக்களின் பிரச்சினையை மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஏசி அறையில் அமர்ந்து ஆராய்ச்சி நடத்தி, ஆலோசனை செய்வதால் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. தவெகவில் குழந்தைகள் அமைப்பு என்று ஒன்று அமைத்துள்ளனர். ஆனால், அதில் 18 வயதிற்கு மேற்பட்டோர் தான் இருப்பார்கள் எனக் கூறுகின்றனர். அது குறித்து மேலும் அந்த கட்சி கூறினால்தான் தெரியும்.
“முதலமைச்சர் அல்வா கடைக்குச் சென்றது..” கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, நிரந்தர பணி நியமனம், செவிலியர் பணி நியமனம் எனக் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் சிறப்பாக அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார். மேலும் சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளவே திருநெல்வேலி இருட்டுக்கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டார்” என்றார்.