சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்துப் பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் அவரது கட்சி போட்டியிட்டது. கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியை சந்தித்தார். அவர் மட்டுமின்றி, அந்த தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட்ட அனைவருமே தோல்வியைத் தழுவினர்.
அரசியல் பின்னடைவு காரணமாக அவருடன் இருந்த சில முக்கிய நிர்வாகிகள் அவரை விட்டு விலகினர். இதனைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்கள் தயாரிப்பது ஆகியவற்றில் கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நடிகர் கமல் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக-மநீம இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மக்களவைத் தேர்தலில் திமுகவுக்காக மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்வார் என்றும், அவருக்கு எதிர்காலத்தில் காலியாகும் மாநிலங்களை எம்பி பதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கும் அணியா? - சர்ச்சையைக் கிளப்பிய தவெக அறிக்கை!
இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக தலைவர் வைகோ, திமுக எம்பிக்கள் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவி காலம் ஜூன் மாதம் முடிவடைய உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 12, 2025
தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள்… pic.twitter.com/ni4Ne3hqFb
இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆறு இடங்களுக்கும் வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் நான்கு பேர் போட்டியிடலாம் என்பதால், அதில் ஒருவராக கமல்ஹாசனுக்கு வாய்ப்புத் தரப்படும் என்று தெரிகிறது. கமல்ஹாசன் கடந்த மூன்று மாதங்களாக வெளிநாட்டில் இருந்து வந்தார். அண்மையில் மீண்டும் அவர் சென்னை திரும்பினார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் கமல்ஹாசனை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார். தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, கட்சியின் பொதுச்செயலாளர் அருணாசலம் உடன் இருந்தார்,"என்று கூறப்பட்டுள்ளது.