சென்னை: அண்ணா பல்கலை கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் அனைத்து தகவல்களும் வெளியே கசியவிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மற்றும் குஷ்பு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
உமாரதி ராஜன்
அப்போது பேசிய பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்த உள்ளோம். இன்றைக்கு தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை பார்க்க முடிகிறது. பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ள பெண்களுக்கு பாதுகாக்கப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களின் விழிப்புணர்வுக்காக போராடினால், அரசு அனுமதி தர மறுக்கிறது.
பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து காவல்துறைக்கும், ஆளுகின்ற அரசுக்கும் தெரியும். இதற்கு முதல்வர் விடை கூற வேண்டும். பாலியல் வன்கொடுமை குறித்து கேள்வி எழுப்பினால் மணிப்பூரை மேற்கோள் காட்டுவதை விட்டுவிட்டு திமுக எம்பி கனிமொழி இதற்கு பதில் அளிக்க வேண்டும். என உமாரதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை சம்பவம்; பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேரில் விசாரணை..!
குஷ்பு
இதையடுத்து பேசிய பாஜக நிர்வாகி குஷ்பு, அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த சம்பவம் இத்துடன் முடிந்து, மீண்டும் இதுபோன்ற சம்பவம் தொடரக்கூடாது. 25 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டோம், கல்வி கட்டணத்தை நீக்கி விட்டோம் என்பதால் அந்த மாணவியின் துயர சம்பவத்தை மறக்க முடியுமா? நாங்கள் பாஜக அலுவலகத்தில் இருந்து பேசினாலும், இப்பொழுது நாங்கள் ஒரு பெண் என்ற முறையில் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அந்த மாணவி குறித்த அனைத்து தகவல்களையும் வெளியே விட்டவர்களை தண்டிக்க வேண்டும். அரசியலை விட்டுவிட்டு இதனை பெண்ணுக்கான பிரச்சனையாக அரசு பார்க்க வேண்டும். தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் பெண்களுக்கான வன்கொடுமைகளை ஒப்பிட்டு பார்க்க கூடாது. கண்ணாடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு மற்றொரு வீட்டில் கல் எறியக் கூடாது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து திமுக சார்பாக ஏதாவது பெண்கள் தெருவுக்கு வந்து குரல் கொடுத்தார்களா? நமது நாட்டு சட்டங்களை வெளிநாட்டில் இருப்பது போல் கடுமையாக்க வேண்டும். என குஷ்பு தெரிவித்தார்.