நியூயார்க்: உலகக் கோப்பை டி20 (T20 World Cup) தொடரின் 19-வது லீக் போட்டியில், கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. மழையால் போட்டி தொடங்க தாமதமான நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. முதல் ஓவரில் ஷாகின் அஃப்ரிதி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸ் அடித்து தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார்.
இரண்டாவது ஓவரில் தனக்கு உரித்தான கவர் டிரைவில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய கோலி, அதே ஓவரில் உஸ்மான் கானிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களுக்கு அவுட்டானார். இதனையடுத்து ரோகித், ஷகின் அஃப்ரிதி பந்தில் ஃபூல் ஷாட் ஆட முயன்று 13 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து பண்ட், அக்சர் படேல் ஜோடி அதிரடியாக ஆடியது. முகமது ஆமிரின் 5வது ஓவரில் பண்ட் பவுண்டரிகளாக விளாசினார். இஃப்திகார் ஒவரில் பவுண்டரி அடித்த அக்சர், நசீம் ஷா பந்தில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 20 ரன்களுக்கு போல்டானார்.
தனது அதிரடியைத் தொடர்ந்த பண்ட் ராஃப் வீசிய இன்னிங்ஸின் 9வது ஒவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். மறுமுனையில் சூர்யகுமார் 7 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களுக்கு நசீம் ஷா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்த ஓவரிலேயே இந்தியா அணிக்கு நம்பிக்கையாக திகழ்ந்த பண்ட் ஆமிர் ஓவரில் தேவையில்லாமல் லாங் ஆனில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 42 ரன்களுக்கு அவுட்டானார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஜடேஜா டக் அவுட்டாக, இந்தியா பேட்ஸ்மேன்கள் திணறத் தொடங்கினர். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 7 ரன்களில் ஏமாற்றம் அளிக்க இந்தியா அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.