ஐதராபாத்: பாகிஸ்தானில் வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பார்வையற்றவர்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு அரசு அனுமதி தர மறுத்ததை அடுத்து இந்திய அணி தொடரில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட பார்வையற்றவர்களுக்கான இந்திய அணிக்கு அரசு அனுமதி தர மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி வாகா எல்லை வழியாகத் தான் அந்நாட்டுக்குள் செல்ல முடியும். வாகா எல்லை வழியாக இந்திய அணி செல்ல தடையில்லா சான்று அரசு வழங்கிய போதும், பாகிஸ்தான் செல்வதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என அதிகாரப்பூர்வமற்ற வகையில் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், நாளை (நவ.21) வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல இருந்த நிலையில், இது வரை அமைச்சக அதிகாரி தரப்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் பார்வையற்றவர்களுக்கான இந்திய கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் சைலேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பையில் கலந்து கொள்வதற்காக இந்திய பார்வையற்றவர்களுக்கான அணி டெல்லியில் 25 நாட்கள் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டது. இருப்பினும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படலாம் என நம்புவதாகவும் சைலேந்திர யாதவ் தெரிவித்தார்.
அதேநேரம், இந்திய அணி கலந்து கொள்ளுமோ, இல்லையோ, ஆனால் பார்வையற்றவர்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிடப்படி நடைபெறும் என போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இதே பிரச்சினை தான் நிலவுகிறது.
இதையும் படிங்க:இந்திய வீரர் புஜாரா ஆஸ்திரேலியா பயணம்! வெளியான உண்மைக் காரணம்!