செயின்ட் லூசியா: டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. ஹேசல்வுட் தனது முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் வீசிய ஓவரில் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் ரோகித் சர்மா ஆட்டத்தை தன் கையில் எடுத்தார். ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் சிக்சர், பவுண்டரி என நாளாபுறமும் சிதறடித்து 29 ரன்கள் எடுத்தார். 4வது ஓவரில் சிக்ஸ் அடித்ததன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா 200 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த உலகக்கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
மறுமுனையில் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடிய பண்ட் 15 ரன்களுக்கு ஸ்டொய்னிஸ் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியதால் இந்தியாவின் ரன் ரேட் எகிறியது. இந்தியா அணி 9 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 2 ஓவர்களில் 34 ரன்கள் வழங்கிய ஸ்டார்க், தனது 3வது ஓவரை வீச வந்தார். அப்போது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 92 ரன்களுக்கு போல்டானார். மற்றொரு புறம் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்தில் 31 ரன்களுக்கு நடையை கட்டினார்.
ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய பாண்டியா கம்மின்ஸ் ஓவரில் வேகம் எடுத்தார். ஸ்டொய்னிஸ் வீசிய 18வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் அடித்தார். அதே ஓவரில் பொறுமையாக ஆடி வந்த ஷிவம் தூபே 28 ரன்களுக்கு அவுட்டானார். இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்தது.