ஐதராபாத்:2025ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தமுள்ள ஆட்டங்களின் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. 2025 மற்றும் 2026 ஐபிஎல் சீசன்களை 84 ஆட்டங்களாகவும், 2027ஆம் ஆண்டு 94 ஆட்டமாகவும் உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், அந்த முடிவில் இருந்து பின்வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
84 போட்டிகளாக அதிகரிப்பு:
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்காக வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை 74ல் இருந்து 84ஆக அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஏற்கனவே 2025 மற்றும் 26ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் போட்டி எண்ணிக்கை 84 ஆகவும், 2027ஆம் ஆண்டு 94 ஆகவும் அதிகரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜூனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி:
ஆனால் தற்போது அடுத்த ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது எனவும், கடந்த ஆண்டைப் போலவே 74 போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
தற்போது வரை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னிலை வகிக்கிறது. எப்படியும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கூடுதல் போட்டிகளை நடத்தும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்திய வீரர்களுக்காக:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளும் பட்சத்தில் இந்திய வீரர்களுக்கு நல்ல ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் 2025ல் 84 போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யவில்லை என்றார்.
மேலும், போட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக வீரர்களின் பணிச்சுமை அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும் ஒப்பந்தத்தின் படி 84 ஆட்டங்களாக ஐபிஎல் தொடரை உயர்த்த வேண்டி இருந்தாலும், 74 அல்லது 84 போட்டிகளை ஏற்பாடு செய்வதா என்பது குறித்து பிசிசிஐ இறுதி முடிவு செய்யும் என்றார்.
இதையும் படிங்க:"செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும்"- செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா! - Chess in olympics Praggnanandhaa