பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 150 ரன்களிலும், ஆஸ்திரேலியா 104 ரன்களிலும் ஆல் அவுட்டானது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது.
அபராமாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஜோடி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியா மண்ணில் புது சாதனை படைத்தனர். அபாரமாக விளையாடிய கே.எல். ராகுல் 77 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணி தனது கன்னி சதத்தை விளாசினார். ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அதிரடி காட்டி வந்த ஜெய்ஸ்வால் இறுதியில் 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் கணக்கை சீரான இடைவெளியில் உயர்த்தினார்.
மறுமுனையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் (1 ரன்), துருவ் ஜூரல் (1 ரன்) சொறப் ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனிடையே கூட்டணி அமைத்த நிதிஷ் ரெட்டி, நிலைத்து நின்று விளையாடி விராட் கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் நீண்ட நாட்களுக்கு பின் விராட் கோலி தனது டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார்.