ஹைதராபாத்:ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திய கோவிட் -19 தொற்று காரணமாக 2021 இல் நடத்தப்பட வேண்டிய இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி முதலில் இரண்டு ஆண்டுகள் ஒத்திபோனது. கரோனா தொற்று காலத்திற்கு பிறகு, உலகின் பல நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருந்தாலும் அவை எதுவும் மக்கள்தொகை எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவுடன் ஒப்பிட முடியாதவையாக இருந்தன.
காரணங்கள்:தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் எழுந்த சர்ச்சைகள், குடியுரிமைச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மற்றும் அதன் விளைவாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) குறித்து பரவலாக எழுந்த விமர்சனம் மற்றும் இப்பதிவேட்டை தயாரிக்க மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க இயலாது என்று சில மாநிலங்கள் பகிரங்கமாக அறிவித்தது போன்றவை மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
தாமதத்தின் விளைவுகள்:மக்கள்தொகை எண்ணிக்கைக்கேற்ப புதிய நகராட்சிகளை சீராக உருவாக்குவதும், ஏற்கெனவே உள்ள நகராட்சிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதும் முக்கியமான பணியாகும். இதற்கு கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள்தொகை உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் குறித்த சமீபத்திய விவரங்கள் அவசியமாகிறது. இந்த விவரங்கள் அனைத்தையும் பெறுவதற்கு ஒரே வழி மக்கள்தொகை கணக்கெடுப்புதான். ஆனால் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படாததால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே தோராயமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய உள்ளாட்சிகளை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை வைத்து, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை மறுசீரமைக்க இயலாத நிலையும் நீடிக்கிறது. இதேபோன்று, நகரமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பழைய புள்ளிவிவரங்களை கொண்டு, ஒரு நகரின் மக்கள்தொகையை கணிப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மொத்தத்திவ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கான கொள்கைகள் அல்லது திட்டங்களை, காலாவதியான மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே வகுக்க வேண்டியுள்ளது.
உணவு மானியம் பெறுவதில் சிக்கல்: உணவு மானியத்தால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை அறிய, மக்கள்தொகை தரவுகளை பயன்படுத்தும்படி, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் சொல்கிறது. ஆனால், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், கோடிக்கணக்கான உணவு மானிய திட்ட பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிந்தபின், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள்தொகையை மதிப்பீட வேண்டும் என்றும் இச்சட்டம் சொல்கிறது.