சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் பெண் நீதிபதிகள் உட்பட தகுதியான சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். அதில், ஒரு லட்சம் பேர் பல்வேறு நீதிமன்றங்களில் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 மொத்த நீதிபதிகளில் 66 பேர் தற்போது பணியில் உள்ளனர். இந்தாண்டு வயது முதிர்வு காரணமாக மேலும் பல நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளனர். அதனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து தரப்பிலும் இருந்து நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: தண்ணீர் குழாய்க்காக தோண்டபட்ட குழியில் விழுந்து உயிரிழந்த நபர் - இழப்பீடு வழங்க மதுரை அமர்வு உத்தரவு!
புதிய நீதிபதிகள் நியமனத்தில் பார் கவுன்சில் பரிந்துரை செய்யும் வழக்கறிஞர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கொலீஜியத்துக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும், அனைத்து தரப்பிலும் இருந்து நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தில் இருந்து மட்டும் நியமிக்காமல் மற்ற சமுதாயத்தில் இருந்தும் தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதனால், நீதிபதிகள் நியமனத்தின் போது அனைத்து பிரிவுகளிலும் இருந்து நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தில் இருந்தும் தகுதியானவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.