திருப்பதி: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்களின் மூன்று இடங்களில் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர்கள் டோக்கனை வாங்க முண்டியடித்துக் கொண்டதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சீனிவாசம் கவுன்டரில் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
பைராகிப்பட்டேடா ராமாநாயுடு பள்ளியில் அமைந்துள்ள மற்றொரு டோக்கன் வழங்கும் மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த அனைவரும் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.
தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சத்தியநாராயணபுரத்தில் அமைந்துள்ள டோக்கன் வழங்கும் மையத்திலும் மீண்டும் நெரிசல் ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, இம்மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்திருந்தது. அதற்காக புதன்கிழமை மாலை முதல் டோக்கன் வழங்கும் மையங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைவேண்டும் எனவும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திர முதலமைச்சர் இன்று (ஜன.9) காலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.