சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ’புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்ததுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ’புஷ்பா’ முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து ’புஷ்பா’ இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போதிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.
’புஷ்பா 2’ திரைப்படத்தின் வசூல் இதற்கு முன் வெளியான பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. தென்னிந்தியாவை விட ’புஷ்பா 2’ வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு மொழியை விட புஷ்பா 2 திரைப்படம் ஹிந்தி மொழியில் அதிக வசூலை பெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.1831 கோடியை வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக தங்களது X பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ’புஷ்பா 2’ படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு ’புஷ்பா 2’ ரீலோடட் வெர்ஷன் வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப காரணங்களால் இந்த ரீலோடட் வெர்ஷன் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
#Pushpa2Reloaded in cinemas from January 17th. #Pushpa2 #Pushpa2TheRule#WildFirePushpa https://t.co/rLmX4PECLf pic.twitter.com/XXcmRoOVts
— Mythri Movie Makers (@MythriOfficial) January 8, 2025
புஷ்பா 2 தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் எக்ஸ் வலைப்பக்கத்தில் இது தொடர்பான போஸ்டரை பகிர்ந்துள்ளனர். அதில் புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் ஜனவரி 11இல் இருந்து ஜனவரி 17ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சங்கராந்தி வாழ்த்துகள் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் புஷ்பா நீட்டிக்கப்பட்ட வெர்ஷனுக்கான காத்திருப்பு கண்டிப்பாக ஏமாற்றத்தை தராது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எமர்ஜென்சி படம் பார்க்க பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் அழைப்பு!
புஷ்பா 2 வெளிவந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் அதனுடைய ஓடிடி வெளியீடு எப்போது என தெரிவிக்கப்படாத நிலையில் திரைப்படத்தின் நேரம் நீட்டிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் நீளம் 3.20 மணிநேரம் என இருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு, படத்தின் நீளம் ஏறக்குறைய நான்கு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.