திருப்பதி: திருப்பதி கோயிலில் கலப்படம் செய்த நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறப்பு புலனாய்வு குழு நான்கு பேரை கைது செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள போலேபாபா ஆர்கானிக் டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் விபின், போமில் ஜெயின், ஸ்ரீகாளகஸ்தியில் உள்ள பெனுபாகாவில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபூர்வா சந்திரா, திண்டுக்கல்லில் உள்ள ஏர்ஆர் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜூ ராஜசேகரன் ஆகிய நான்கு பேரை சிறப்பு புலனாய்வு குழு ஞாயிறு அன்று கைது செய்தது.
இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், "போலேபாபா டெய்ரி நிறுவனத்தை சேர்ந்த இருவர், வைஷ்ணவி டெய்ரிநிறுவனத்தை சேர்ந்த ஒருவர், ஏர் ஆர் டெய்ரி நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் பல்வேறு தீவிரமான விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்தே நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்,"என்றார்.
![திருப்பதி லட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/1200-675-22552830-thumbnail-16x9-tirupatiladdu_1002newsroom_1739176767_231.jpg)
ஆந்திர மாநிலத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி திருமலா கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட குழு நான்கு பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் திருப்பதியில் உள்ள இரண்டாவது கூடுதல் முன்சீப் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
சிறப்பு புலனாய்வு குழவின் விசாரணையில், "ஏஆர் டெய்ரியின் பெயரில் போலி ஆவணங்கள், போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி நெய் விநியோகிப்பதற்கான டெண்டரை எடுத்துள்ளது. போலேபாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனம் அதிக அளவு நெய்யை தயாரிக்கும் திறன் பெற்றது அல்ல. வெளி நிறுவனங்களிடம் இருந்து நெய்யை கொள்முதல் செய்து அது விநியோகித்திருக்கிறது.
விசாரணை குறித்து பேசிய அதிகாரி ஒருவர், "போலேபாபா டெய்ரி என்ற நிறுவனம் ஸ்ரீவைஷ்ணவி டெய்ரி நிறுவனத்துக்கு கிலோ ரூ.335 என்ற விலையில் நெய்யை விற்பனை செய்திருக்கிறது. இதன் பின்னர் இந்த நிறுவனம் ஒரு கிலோ நெய் ரூ.319.8 என்ற விலையில் ஏஆர் டெய்ரிக்கு விற்பனை செய்தது. மோசமான தரம் கொண்ட நெய்யாக இருந்தால் தவிர, இவ்வளவு விலை குறைவாக விற்பனை செய்திருக்க முடியாது. மேலும் நெய்யை விற்பனை செய்ததற்கான ரசீதுகள், இவே ரசீதுகள், டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்தப்பட்ட ரசீதுகள் போன்ற ஆதாரங்கள் எதனையும் அந்த நிறுவனம் தரவில்லை,"எனக் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ரூ.319.80 விலையில் 10 லட்சம் கிலோ நெய் விநியோக்கும் டெண்டரை ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு ஒய்எஸ்ஆர்சிபி காங்கிரஸ் அரசு வழங்கியது. எனினும் அதே ஆண்டு ஜூலை மாதம் ஏஆர் டெய்ரி நிறுவனத்தால் வழங்கப்பட்ட நான்கு டேங்கர் லாரி நெய் தரம் குறைவாக இருந்ததாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறியிருக்கிறது. நெய் மாதிரிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள என்டிடிபி கால்ப் லேப் என்ற நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. சோதனையின் முடிவில் நெய்யில் மாடு, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆய்வு முடிவை அடுத்து இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை ஆந்திர அரசு அமைத்தது. இதற்கிடையே உச்ச நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிபிஐ புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு விசாணைக்குழுவை அமைத்தது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகள் மூலம் பல்வேறு ரசீது எண்கள் மூலம் கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தெளிவான பதில் அளிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது எனக் குற்றம்சாட்டினார். இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.