சென்னை: நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தென் மாநிலங்கள் அதிகளவு பங்களிப்பு செய்து வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் உகலகளாவிய பொருளாதார இணைப்பு மாநாடு சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதில் தென்னிந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நந்தினி வரவேற்புரையாற்றினார். கூட்டமைப்பின் துணை தலைவர் முகுந்தன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டின் நோக்கம் குறித்து மாநாட்டு தலைவர் அசோக் விளக்கி பேசினார்.
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதே போன்று தனிநபர் வருவாயிலும் சிறந்து விளங்குகின்றன. 2023-24-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் 31 சதவீத பங்களிப்பை கொடுத்தன. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை அதிகளவு பங்களிப்பை கொடுத்துள்ளன. அதற்கு அடுத்தப்படியாக தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் பங்களிப்பை அளித்துள்ளன. நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் ஆந்திர மாநிலம் 36.2 சதவீத உற்பத்தியை கொடுத்துள்ளது. அரிசி உற்பத்தி, மீன் வளம், கால்நடை போன்றவற்றின் மூலம் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.
![சென்னையில் நடைபெற்ற உகலகளாவிய பொருளாதார இணைப்பு மாநாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/tn-che-02-cii-chief-economic-anantha-nageshwaran-script-photo-7204807_10022025142612_1002f_1739177772_1034.jpg)
வாகன உற்பத்தி, ஜவுளி, எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றின் மூலம் இந்தியாவின் உற்பத்தி துறையில் தமிழ்நாடு 20.4 சதவீத பங்களிப்பை கொடுத்துள்ளது. கர்நாடகாவை பொருத்தமட்டில் எலெக்ட்ரானிக்ஸ், செமி கண்டக்டர், விண்வெளித்துறை போன்றவற்றின் மூலம் 13.3 சதவீதம் பங்களிப்பை அளித்துள்ளன. தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் மருந்து பொருட்கள் உற்பத்தி, உணவு தொழில் நிறுவனங்கள் மூலம் 11.4 சதவீத பங்களிப்பை கொடுத்துள்ளன.
உற்பத்தி துறை, சேவை துறை, வெளிநாட்டு ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது போன்றவற்றில் தென்மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ள போதிலும் ஆராய்ச்சி துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. ஆராய்ச்சி துறையை பொறுத்தமட்டில் உலகளவில் இந்தியா சற்று பின் தங்கியே உள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு தென்மாநிலங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.