மயிலாடுதுறை: அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்பத்துடன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டம் கிராமத்தில் பழமையான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இவை ஒய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தாயாருடைய பரம்பரை கோயில்கள் ஆகும்.
சிதிலமடைந்த இந்த இரு கோயில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று (பிப்.10) காலை கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, 7 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத இரண்டு கோயில்களில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மூலாலய மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சுந்தரேசய்யர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா - அமைச்சரவை ஒப்புதல்!
இந்த நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது குடும்பத்தினருடன் கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார். அஸ்வின் தாயார் சொந்த ஊரான பெருந்தொட்டம் கிராமத்தில் உறவினர்களுடன் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு களித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (38) சமீபத்தில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்தாண்டு விளையாடவுள்ளார்.