மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வள்ளி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தண்ணீர் குழாய் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த தனது கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு நேற்று (ஜனவரி 7) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரரின் கணவர் தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வேலைக்கு சென்று திரும்பும் போது, உச்சையா கோயில் அருகே தண்ணீர் குழாய் அமைப்பதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் தோண்டிய குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: 'போலீசுக்கு நேரமில்லை.. இனி சிபிஐ விசாரிக்கட்டும்'.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
இந்நிலையில் தோண்டப்பட்ட குழிக்கு முன் எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்படவில்லை. ஆகவே, மனுதாரரது குடும்பத்திற்கு 13 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை தனியார் ஒப்பந்ததாரர்கள் வழங்க வேண்டும். அதுவும், மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 சதவீதம் வட்டியுடன் 4 வாரத்திற்குள்ளாக வழங்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.
மேலும், இந்த தொகையை மனுதாரரும், அவரது மகனும் சரி பாதியாகப் பிரித்துக் கொள்ளவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.