டிசம்பர் மாதம் என்றால் நினைவுக்கு எட்டுவது விடுமுறையும் சுற்றுலாவும் தான். அதிலும், சுற்றுலா என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது நமது பக்கத்து மாநிலமும் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா தான். காரணம், இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை காண யாருக்கு தான் ஆசை இருக்காது. இந்த விடுமுறைக்கு கேரளாவில் உள்ள இந்த 5 இடங்களுக்கு சென்று நேரத்தை செலவிட்டு மகிழுங்கள்..
- மலக்கப்பாரா(Malakkappara): இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான மலைவாசஸ்தலம் தான் மலக்கப்பாரா. கேரளா - தமிழ்நாடு எல்லையோர கிராமமான இந்த இடத்தில், சுற்றுலாப் பயணிகளின் மனதை கவரும் காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
பசுமையாக தேயிலை தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த வானிலை மலக்கப்பராவை கூடுதல் அழகாக்குகிறது. இந்த இடத்திற்கு செல்லும் பாதையில், அதிரப்பள்ளி வியூ பாயிண்ட், சார்பா நீர்வீழ்ச்சி, பெரிங்கல்குத்து அணை, அனக்காயம் பாலம், சோலையார் அணை, வால்வ் ஹவுஸ் மற்றும் பென்ஸ்டாக் போன்ற இடங்களையும் பார்வையிடலாம்.
- வாகமன் (Vagamon): கவர்ச்சியான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான வாகமன், ஆசியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நிறைந்துள்ள வழுக்கு பாறைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. டிரக்கிங், பாரகிளைடிங் போன்ற சாகச நடவடிக்கையில் ஈடுபட ஆசையுள்ளவர்களுக்கு சிறந்த இடம்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகமனுக்கு வருபவர்கள், இந்த இடத்தை மட்டுமல்லாமல் மலைகளை சூழ்ந்திருக்கும் மூடுபனியின் அழகையும் அனுபவிக்க முடியும். பைன் மரங்களின் அழகும், தேயிலைத் தோட்டங்களின் அரவணைப்பும் இங்கு வரும் ஒவ்வொருவரையும் வசிகரிக்கும். வளைந்து நெளிந்து செல்லும் இந்த சாலைகள் சுற்றுலா பயணிகளுக்கு மற்ற முடியாத அனுபவத்தை தரும்.
- பொன்முடி (Ponmudi):அழகிய காடுகளும் குன்றுகளும் நிறைந்த பகுதி தான் பொன்முடி. கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பொன்முடி, கண்கொள்ளாக் காட்சிகளை சுற்றுலாப் பயணிகளுக்காகக் வைத்திருக்கிறது.
நீர்வீழ்ச்சிகள், காட்டு ஓடைகள், பச்சை மலைகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் ஆகியவற்றால் இந்த இடம் நிறைந்து செழிப்பாக இருக்கின்றது. பெப்பரா வனவிலங்கு சரணாலயம், எக்கோ பாயிண்ட் மற்றும் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். இங்கு, டிரிங்கிங் செல்லலாம்.
- வயநாடு (Wayanad): கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடம் வயநாடு. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வயநாடு இயற்கை அழகுடன் சூழப்பட்டுள்ளது. வரலாற்றை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கும், சாகசப் பிரியர்களுக்கும் ஏற்ற இடம்.
நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வரலாற்று குகைகள் இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. எடக்கல் குகை, சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி, வயநாடு வனவிலங்கு சரணாலயம், இதய வடிவ ஏரி, பூக்கோடு ஏரி, பாணாசூரா அணை ஆகியவை வயநாட்டின் முக்கிய இடங்கள்.
- மூணாறு (Munnar):கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் பசுமையான மலைகளும் தேயிலை தோட்டங்களும் மூணாரை மிகவும் அழகாக மாற்றுகிறது. இந்த இடம் தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் தேர்வு செய்ய சிறந்த இடங்களில் ஒன்று மூணாறு.