புதுடெல்லி:அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந் நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமர் மோடியின் பயணம் குறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், பிரான்சில் இரண்டு நாள் பயணத்தை முடித்த உடன் அவர் அமெரிக்கா செல்கிறார் என்று குறிப்பிட்டனர்.
பிப்ரவரி 12ஆம் தேதி மாலை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி, அதற்கு அடுத்த நாள் அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதிபர் தேர்தலில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்றார்.
டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற சில நாட்களில் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு தலைவர்களில் மோடியும் ஒருவராவார். எனினும் பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து கடந்தவாரம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் அமெரிக்கா செல்வதாக கூறியிருந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செயற்கை நுண்ணறிவு செயல்பாடு உச்சிமாநாடு வரும் 10 மற்றும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லும் பிரதமர், அதிபர் டிரம்ப் உடன் குடியேற்றம், இறக்குமதி பொருட்கள் மீதான கட்டணங்கள் ஆகியவை குறித்து பேசுவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க:"தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு" - அஸ்வினி வைஷ்ணவ்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவிகித கட்டணம், சீன பொருட்களுக்கு 10 சதவிகித கூடுதல் கட்டணமும் விதிக்கப்படுவதாக கூறியிருந்தார். முன்னதாக பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் இருவரும் கடந்த ஜனவரி 27ஆம் தேதி தொலைபேசி வழியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது குறித்து இருவரும் பேசினர்.
தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு துறை உபகரணங்களை இந்தியா கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை முன்னெடுப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உத்திப்பூர்வமான உறவை மேலும் முன்னெடுப்பது என்றும், இந்தோ-பசிபிக் குவாத் ஒத்துழைப்பு, இந்த ஆண்டின் இறுதியில் முதன்முறையாக குவாத் தலைவர்கள் மாநாட்டை நடத்துவது குறி்த்தும் ஆலோசனை மேற்கொண்டனர்,"என்று கூறப்பட்டது.
அமெரிக்காவுடன் குறிப்பாக பசுமை எரிசக்தி துறையில் ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. அணுசக்தி பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும், அணு சக்தி இயக்கத்தை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக கடந்த ஒன்றாம் தேதி இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாகவே இந்தியா தரப்பில் இத்தகைய நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப்பூர்வமாக பொதுப்பயன்பாட்டுக்கான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை முன்னெடுத்துச் செல்ல அணு சக்தி பாதிப்பு சட்டம் 2010ல் இந்தியாவின் பொது பொறுப்புடைமையில் சில பிரிவுகள் தடையாக உள்ளன. சிறிய ரக மாதிரி அணுசக்தி ரியாக்டர்கள் விஷயத்தில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைப்பு மேற்கொள்வதை எதிர்பார்த்து உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹோல்டெக் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், சிறிய ரக மாதிரி ரியாக்டர்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறது. அணு எரிசக்தி துறையானது, அமெரிக்க நிறுவனத்துடன் சில ஒத்துழைப்புகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் தெரிகிறது.