அமெரிக்கா (வாஷிங்டன்): அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு கருதி, இரண்டு மிகப்பெரிய வர்த்த கூட்டாளிகளான மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு எதிராக அறிவித்த 25% கூடுதல் வரி விதிப்பு உத்தரவை 30 நாட்கள் நிறுத்தி வைத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று திங்கட்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, அபார வெற்றியைப் பெற்றார் டொனால்ட் டிரம்ப். அதனைத் தொடர்ந்து பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத குடியேற்ற வெளியேற்றம், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களின் குடியுரிமை ரத்து, அண்டை நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்துள்ளார்.
அதிபரின் அதிரடி உத்தரவால் உலகம் முழுவதும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி சட்டவிரோத நுழைவு மற்றும் போதைப் பொருள்கள் கொண்டு வருவதைத் தடுக்க கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு, இறக்குமதி வரியில் கூடுதலாக 25 சதவீதம் விதித்து டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால், அதிருப்தியடைந்த கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
— Donald J. Trump (@realDonaldTrump) February 3, 2025
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, கூடுதல் வரிவிதிப்பு குறித்து மூன்று நாட்டு அதிபர்களும் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டதால் தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரும் 13-ந் தேதி சந்திக்கிறார் நரேந்திர மோடி!
கனடா மற்றும் மெக்சிகோ நாட்டின் தலைவர்கள் தங்களது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளாத தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு எதிராக அறிவித்த 25% கூடுதல் வரி விதிப்பு உத்தரவை 30 நாட்கள் நிறுத்தி வைத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதேபோல், 2019ஆம் ஆண்டு மெக்சிகோ அரசும் அமெரிக்காவின் வரிகளைத் தவிர்த்த போது, அரசாங்கம் அதன் வடக்கு எல்லைக்கு 15 ஆயிரம் வீரர்களை அனுப்புவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிரம்ப் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், சட்டவிரோதமாக நுழையும் விவகாரத்தில் உடனடியாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஒப்புக்கொண்டுள்ளனர். அதனால், நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழையும் மக்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். ஆகையால், 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பை தற்காலிகமாக 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார்.