கோயம்புத்தூர்: காலநிலை மாற்றம் என்பது உலகளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக சர்வதேச கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகியது. இந்த வெப்ப அலையால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டும் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே, இத்தகைய வெப்பத்தை சமாளிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், தற்போது தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டும் அதிகரிக்கும் வெப்பம்:
பருவமழை காலம் மற்றும் குளிர் காலம் முடிந்து தற்போது பகல் நேர வெப்பம் அதிகரித்து வருவது கோடைக்காலம் துவங்குவதன் அறிகுறியாகும். கோவையை பொறுத்தவரையில், கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ். ஆனால், தற்போது பிப்ரவரி மாதத்தில் இதுவரை பதிவான வெப்ப நிலையின் அளவு 32.4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
இந்தாண்டில், கோவை மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதுவே கோவையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவையில் இப்பவே உக்கிரமான வெயில்.. "மே மாதம் எப்படி இருக்கும்?" நிபுணர் சொல்வதை கேளுங்கள்! |
இந்த நேரத்தில் குழந்தைகளையும் பெரியவர்களையும், பாதுகாப்பது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிக வெப்பம் நிலவும் சூழலில் உடலில் நீர்தன்மை குறைந்து, பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பு:
வெயில் தாக்கம் குறித்து கோவை பந்தய சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான மருத்துவர் பக்தவச்சலம் கூறுகையில், “வழக்கமாக கோடை காலங்களில் ஏற்படும் வெப்பம் சலனம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து குறையும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எளிதில் நோய் வாய்ப்படுவார்கள்.
தலைநகர் டெல்லி, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். ஏப்ரல், மே, ஜூன் வரையில் வெப்பம் அதிகமாக காணப்படும். கோவையில், இந்த மூன்று மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது உடம்பில் நீர்ச்சத்து குறையும். ஐந்து லிட்டர் ரத்தத்தில் 3 லிட்டர் தண்ணியாகவும், 2 லிட்டர் ரத்த அணுக்களாகவும் இருக்கும்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு:
வியர்வை அதிகமாக வெளியேறும்போது ஹீட் ஸ்ட்ரோக் (Heat stroke) மற்றும் ஞாபகமின்மை ஏற்படும். இதனால், வருடந்தோறும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தை காட்டிலும் வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகம். மரங்கள் அதிகமாக வளர்க்கும்போது இதிலிருந்து தப்பிக்கலாம். சாதாரணமாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்கும்போது வெயில் காலத்தில் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் காரணமாக வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியும்.
தண்ணீர் குடிப்பதே தீர்வு:
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிகப்படியான குடிநீர் தர வேண்டும். சாலை ஓரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறுகளை குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது. வெளியில் வாங்கும் உணவுகளை தவிர்த்துவிட்டு, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பதன் மூலம் அதனால் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.
வெயிலால் ஏற்படும் வயிற்றுப்போக்கை சரி செய்ய உப்பு சர்க்கரை கலந்த கரைசலை கொடுக்க வேண்டும். வெயில் அதிகம் பணியாற்றும் பொதுமக்கள், மார்க்கெட்டிங் பிரிவினர் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்காவிட்டால் சிறுநீரகத்தில் கல் உற்பத்தியாகும். அது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். அதை தவிர இளநீர், பழச்சாறு போன்றவற்றை குடிப்பதன் மூலம் வெப்ப பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்” என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.