ஈரோடு: அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திட்டத்தின் கூட்டமைப்பினர் நேற்று பாராட்டு விழா நடத்தினர். இந்தப் பாராட்டு விழாவில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காராவிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், "ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையம், பாரியூர், நஞ்சுண்டான் பாளையம், மொட்சூர், கலிங்கியம், பொளவகாளிபாளையம் பகுதிகளை ஊராட்சிகளை கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது,"என்று வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: போலீசாரை போல் காக்கி வேடம் போட்டு பேராசிரியை வீட்டைச் சூறையாடிய கும்பல்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்த குழுவினர் மூன்று நாட்களுக்கு முன்னா் என்னை சந்தித்தனர்.
விழா மேடை, விளம்பர பலகைகள் ஆகியவற்றில் எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகைகளைப் பார்த்த போது தான் எனது கவனத்திற்கு வந்தது.
என்னிடத்தில் கலந்து ஆலோசனை செய்திருந்தால், இதனை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பேன் என விழாக்குழுவினரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், இந்தத் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கு அடித்தளமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்ச்ர் ஜெயலலிதா. எனவே அவரது படம் அவசியம் இடம் பெற வேண்டும் என்று விழாக்குழுவினரிடம் கூறினேன். ஆனால், இந்த காரணத்துக்காக நான் விழாவை புறக்கணிக்கவில்லை. விழாவுக்கு செல்லவில்லையே தவிர, அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டு குழுவின் கவனத்திற்கு என்னுடைய ஆலோசனையை சொன்னேன்,"என்றார்.