கட்டாக்:இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஜோடி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தனர். குறிப்பாக ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 90 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார். இவற்றில் 7 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும்.
சுப்மன் கில் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 52 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க, அப்போதே இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது.
ஆனால், இவர்களுக்கு அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாக, ஆட்டம் கொஞ்சம் இங்கிலாந்தின் பக்கம் திரும்பியனது.
இருப்பினும் அடுத்தடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும், அக்ஸர் படேல் 41 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றனர். 44.3 ஓவர்களிலேயே, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்களை எடுத்து இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார்.