சென்னை: 2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அடுத்த மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.10) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் முதலமைச்சர் மிக பெரிய புரட்சியை செய்துள்ளார். சென்னையை சுற்றி உள்ள 4 மாவட்டங்களில் 32 கிலோ மீட்டரில் ஆக்கிரமித்து குடியிருப்பவர்கள் பட்டா பெறாமல் இருப்பதை முதலமைச்சர் அறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் உள்ள 32 கி.மீ உள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கில் வசிக்கும் 29,187 பேர் பயன் பெற உள்ளனர். சென்னை மாநகராட்சியை தவிர்த்து மற்ற இடங்களில் வசிக்கும் 86,000 பேர் பட்டா பெற்று பயனடைய உள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!
1962-ல் இருந்து இன்று வரை தீர்க்கப்படாமல் இருந்த பட்டா பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதங்களில் 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க திட்டமிட்டுள்ளோம். நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க முடியாது. எந்த ஒரு தனி மனிதனுக்கும் வீடு இல்லை என்கிற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற நிலை வர வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார்.