தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோியிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம். இந்நிலையில் நாளை (பிப்.11) தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு பாத யாத்திரையாக வரும் மக்கள் தாங்கள் வரும் வாகனங்களில் முருகனின் புகைப்படத்தை அலங்காரம் செய்து, ஆட்டம் பாட்டத்துடன் முருகனின் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். மேலும், பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
அதே போல் திருச்செந்தூர் கடற்கரையில் கொண்டு வந்த முருகனின் விக்ரகங்களை வைத்தும், சிவலிங்க உருவங்களைச் செய்து அலங்கார பஜனைகள், மந்திரங்கள் ஓதி வழிப்பட்டனர். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தினத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை சென்று சிறப்புத் தரிசனம் செய்வதற்குச் சிறப்பு வழி அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தைத் தேரோட்டம்.. விண்ணை முட்டிய 'கோவிந்தா..' கோஷம்!
அதில் நடந்து வரும் பக்தர்களுக்கு வரும் வழியில் கையில் இரண்டு வண்ணங்களில் டேக் ஒட்டப்படுகிறது. அந்த டேக் ஒட்டப்பட்டுள்ள பக்தர்கள் மட்டும் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வழியாகச் சென்று எளிய முறையில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தைப் பூசத்தன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.