சென்னை: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரிஜினலாக வெளியாகவுள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள், நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025ஆம் ஆண்டு முழுவதும் வெளியாகவுள்ள படைப்புகள் குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. புத்தம்புதிய திரைப்படங்கள், வெப்சீரியஸ்கள் என நெட்பிளிக்ஸின் அறிவிப்பு மிரட்டுகிறது.
டெஸ்ட்: ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த YNOT Studio சசிகாந்த் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இந்தப் படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பின்னணி பாடகியான சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக கொண்டு சுழலும் கதையில் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மூன்று மனிதர்களின் முடிவுகள்தான் திரைக்கதையாக இருக்கும் என தெரிகிறது. இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அக்கா: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள வெப் சீரியஸ் இது. ’அக்கா’ வெப்சீரியஸின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. டீசரில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே என மிரட்டலாக காட்சியளிக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1980களில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்
இக்கதையானது தாய்வழி சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கிடையேயான அதிகார மோதலை பேசுகிறது. இந்தத் தொடரை தர்மராஜா ஷெட்டி இயக்கியுள்ளார். ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
ராணா நாயுடு: சீசன் 2: ராணா டகுபதி, வெங்கடேஷ் டகுபதி, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வெப் சீரியஸ் இது. 2023ஆம் ஆண்டு இதன் முதல் சீசன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் வெளியாகிறது. புதுவிதமான சிக்கலை கையாளும் ராணா ஜெயிக்கிறரா இல்லையா என ஆக்ஷன் காட்சிகளுடன் கதை அமைத்துள்ளனர்.
டப்பா கார்டெல்: ஷபானா ஆஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த வெப் சீரியஸை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். தானேவில் வாழும் ஐந்து சராசரி குடும்பத்து பெண்கள் செய்யும் அசாதரணமான வேலைகளையும் அவர்களது நெருக்கடிகளையும் த்ரில்லர் பாணியில் பேசும் தொடர் இது.
இவை தவிர நடிகர் ஷாருக்கான் மகன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய வெப் சீரியஸின் டைட்டில் அறிவிப்பு, ராஜ்குமார் ராவ் நடிக்கும் ‘டோஸ்டர்’,சைஃப் அலி கானின் ’ஜுவல் தீஃப்’, நீரஜ் பாண்டேவின் ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’, ‘கோர்ரா: சீசன் 2’, ‘டெல்லி கிரைம்: சீசன்3’ உள்ளிட்ட படைப்புகள் குறித்த அறிவிப்பையும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
மேலும் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் துணை தலைவர் மோனிகா இந்த ஆண்டு வெளியாகும் படைப்புகளை பற்றி, ”2025 இல், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு எங்களது கற்பனை எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி உலகத் தரத்திற்கு இணையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதுவிதமான கதைகளை வழங்க இருக்கிறோம்.
அருமையான காதல் கதைகள் முதல் டிராமாக்கள், வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைப்படங்கள், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் திரைப்படங்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருப்பமான திரைப்பட வரிசைகள் வரை அனைவருக்குமான படைப்புகளை வழங்க இருக்கிறோம். இந்தியாவில் மிகவும் பிரபலமான கலைஞர்கள் மற்றும் புதுமுக கலைஞர்கள் என அனைவரோடும் கைகோர்த்து புத்துயிர்ப்பான படைப்புகளை கொண்டு வந்துள்ளோம்.
700 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் உள்ள இந்த தளத்தில், ஒரே மாதிரியாக இல்லாமல், எங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ..? அவ்வளவு சிறப்பாகவும் தரமாகவும் பலதரப்பட்ட படைப்புகளையும் கொடுக்க முயற்சித்துள்ளோம். பார்வையாளராக உங்களுடைய எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் நெட்ஃபிளிக்ஸில் அடுத்தடுத்து வெளியாகப் போகும் படைப்புகள் என்னென்னவென்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருக்கும்” என கூறியுள்ளார்.