மதுரை: திருப்பரங்குன்றம் தர்கா சர்ச்சை தொடர்பாக இந்து அமைப்புகள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி தமிழ்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை. மேலும் மதுரையை சுற்றி 144 தடை உத்தரவையும் போலீசார் பிறப்பித்திருந்தனர். இதனால், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற இந்து அமைப்புகளை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 300 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சுந்தரவடிவேல், முருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் , "மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும், இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பொதுமக்கள் கலந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறையின் செய்தி குறிப்பையும் ரத்து செய்ய வேண்டும்," என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில்,"திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகி விடக்கூடாது. மேலும் வரும் 11ஆம் தேதி வரை விழாக்காலம் என்பதால் அதுவரை போராட்டம் நடத்த அனுமதிப்பது கடினம். மீறி போராட்டம் நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள்,"என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதில் பொதுமக்கள் கலந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி அறிக்கை வெளியிட்டது சரியான நடவடிக்கை அல்ல. எப்போது அனுமதி வழங்க இயலும்,"என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்கும் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: அசாதாரண சூழல்... காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்த மதுரை!
மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "ஆக்கிரமிப்பை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, ஆக்கிரமிப்பை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?" என கேள்வி எழுப்பினார்.
அரசுத்தரப்பில்"13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 18.01.25 அன்று ஆடுகள், கோழிகளை பலியிட்டு, சமைத்து பரிமாற முயன்றதாக 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், " இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர் மதியம் 2 மணிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது உத்தரவிட்ட நீதிபதிகள்,"ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும் அது அரசியலமைப்பிற்கு உட்பட்டும், பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும். பழங்காநத்தம் பகுதியில் 5 முதல் 6 மணி வரை 1மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். 1 மைக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக்கூடாது, ஆர்ப்பாட்டம் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.