சென்னை: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். ’காலா’, ’சில்லு கருப்பட்டி’, ’ஜெயீம்’ போன்ற படங்களில் துணை நடிகராக கவனம் ஈர்த்தார். 2023ஆம் ஆண்டில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான ’குட்நைட்’ திரைப்படம் அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ’லவ்வர்’ திரைப்படமும் ஹிட்டானது.
அதனால் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. குடும்பங்களுக்கான திரைப்படத்தை இவரிடம் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி மணிகண்டன் நடிப்பில் ’குடும்பஸ்தன்’ திரைப்படம் வெளிவந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ’குடும்பஸ்தன்’ திரைப்படம். மணிகண்டனின் ஹாட்ரிக் வெற்றிப் படமாக ’குடும்பஸ்தன்’ மாறியுள்ளது.
மணிகண்டனைத் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சான்வே மேக்னா, கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா, முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு திருமணமானவுடன் ஏற்படும் பொறுப்புகளையும் குடும்ப பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறான், என்பதை நகைச்சுவையான கதையாக காட்சிப்படுத்தியிருந்தனர். அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சீரியஸான பிரச்சினைகளைக் கூட முழுக்க முழுக்க நகைச்சுவையாக ரகளையாக ஜாலியாக திரைக்கதை அமைத்து சொல்லியதால் முதல் நாளில் இருந்தே வசூல் மழை கொட்டுகிறது.
மாதக்கடைசியில் படல் வெளியாகி இருந்தாலும் முதல் மூன்று நாட்களிலேயே 6.5 கோடி ரூபாய் வசூல் செய்து மக்களின் பேராதரவை சொல்லியது ‘குடும்பஸ்தன்’ திரைப்படம். சால்க்னிக் இணையதளத்தின்படி, ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் முதல் நாளில் 1 கோடி, இரண்டாவது நாளில் 2.2 கோடி, மூன்றாவது நாளில் 3.2 கோடி, நான்காவது நாளில் 1.1 கோடி வசூல் செய்துள்ளது. முதல் ஏழு நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் 10.25 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் நேற்றுடன் (பிப்.03) 11 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ’குடும்பஸ்தன்’ திரைப்படமானது, இந்திய அளவில் 17.03 கோடி ரூபாயையும் உலகளவில் 18 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ’குடும்பஸ்தன்’ திரைப்படம் வெளியாகி ஆறு நாட்கள் கழித்தே தமிழ்நாட்டைத் தவிர உலகமெங்கும் திரையிடப்பட்டது. இந்த படத்தின் வசூலானது மணிகண்டனின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகம்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் ’அக்கா’ முதல் நயன்தாராவின் ’டெஸ்ட்’ வரை... 2025இல் மிரட்ட போகும் நெட்ஃபிளிக்ஸ் படைப்புகள்
அதுமட்டுமில்லாமல் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் வசூலை விடவும் அதிகம். பொங்கலுக்கு வெளியான கேம் சேஞசர் தமிழ் பதிப்பு 23 நாட்கள் முடிவில் 9 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் மற்றுமொரு மினிமம் கியாரண்டி ஹீரோ கிடைத்துவிட்டார் என அனைவரும் மணிகண்டனை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர். மாபெரும் வெற்றியை அளித்த மக்கள் அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.