மதுரை: தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 72-ல் இருந்து விரைவில் 90-ஆக உயர்த்தப்பட உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் (NHAI) யின் முக்கியப் பணி அனைத்து மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைப்பது மற்றும் மேம்படுத்துவது ஆகும். பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமல்லாமல் சரக்குப் போக்குவரத்திற்கும் அத்யாவசியமான தரமான சாலைகளை உருவாக்கும் பொறுப்பு NHAI-க்கு உள்ளது. இந்தியாவில் உள்ள 1,46,145 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில் 1041 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 72 சுங்கச்சாவடிகள் உள்ளன.
ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் 27; தெலங்கானா மாநிலத்தில் 25; கேரளா மாநிலத்தில் 11 ஆகிய எண்ணிக்கையிலேயே சுங்கச் சாவடிகள் தற்போது இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள 72 சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையானது 90-ஆக உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அது போக மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பாகவும் சுமார் 10-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
60 கி.மீ இடைவெளியில் சுங்கச்சாவடி எதுவும் அமைக்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளிலும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 60 கி.மீ இடைவெளி தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளார். ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த சுங்கச் சாவடிகளில் மூன்றில் 1 பங்கு சுங்கச் சாவடிகள் 60 கிமீ இடைவெளிக்குள்தான் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற எல்லையிலிருந்து 15 கிமீ தூரத்திற்குள் டோல் பிளாசா இருக்கக் கூடாது என்ற நிலையில் மதுரையைச் சுற்றி கப்பலூர், சிட்டம்பட்டி, எலியார்பத்தி போன்ற இடங்களில் இயங்கி வரும் சுங்கச் சாவடிகள் 15 கிமீ தூரத்திற்குள்ளும், 60 கிமீ இடைவெளிக்குள்ளும் அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
தற்போதுள்ள அதிகப்படியான சுங்கக் கட்டணத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் சுங்கச் சாவடிகள் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையேற்றத்தால் தொழில் வணிகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பானது, தொழில் வணிகத் துறையினரை மட்டுமல்லாது, லாரி / பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், நெல், சமையல் எண்ணெய், பால் போன்ற அத்யாவசியப் பொருட்கள் மற்றும் அனைத்து வகையான பிற பொருட்களையும் லாரிகள் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், அத்யாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதோடு, பணவீக்கத்தையும் அதிகப்படுத்தும்.
சாலை கட்டுமானப் பணிக்கான செலவு பராமரிப்பு அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டுகளில் வசூல் செய்த பிறகு டோல் அகற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் டோல் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை இயங்க வேண்டும் என்பதில் மத்திய / மாநில அரசுகளிடம் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை. குறிப்பாக Fast Tag மூலம் நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து கட்டணத்தை எடுத்து வருவது நமது பணம் போவது குறித்து நமக்கே தெரியாத நிலையில் தான் உள்ளது.
கடந்த 2023-2024ஆம் ஆண்டில் டோல் பிளாசா மூலம் சுங்கக் கட்டணம் ரூ.56,882 கோடி வசூலிக்கப்பட்டது. இன்னும் ஒவ்வொரு ஆண்டும் புதியதாக சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டு வருவதும், தற்போதுள்ள 1041 சுங்கச் சாவடிகளை இரண்டாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதும் பொதுமக்களையும் தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே தொழில் வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு, GST-யில் உள்ள குழப்பங்களால் தொழில் நடத்த முடியாத நிலையில் இருந்துவரும் தொழில் வணிகத் துறையினருக்கு குறிப்பாக பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பானது மிகுந்த பாதிப்பையும், பொருளாதார சிரமங்களையும் ஏற்படுத்தும். எனவே, சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய, அரசு உடனே ரத்து செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கேட்டுக் கொண்டுள்ளார்.