சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் போலீஸ் பின்தொடர்வதை அறிந்து கோயம்பேட்டில் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ஆட்டோவில் இருந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நேற்றிரவு (பிப்.3) சேலத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். பின்னர் இரவு 11 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு ஆட்டோவில் அந்த சிறுமி ஏறியுள்ளார். பின்னர் அங்கிருந்து சிறிது தூரத்தில் அதே ஆட்டோவில் மேலும் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ஏறியுள்ளனர். தொடர்ந்து ஆட்டோ சென்றுகொண்டிருந்த நிலையில் சிறுமி சத்தம் போட்டுள்ளார்.
இதையும் படிங்க: மெரினா, பெசன்ட் நகர் பீச்சில் டோல்கேட் முறையில் கட்டணம்: என்ன சொல்கிறது சாத்தியக்கூறு ஆய்வறிக்கை?
சிறுமி சத்தம் போடவே சாலையில் சென்ற நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினர் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றனர். போலீஸார் துரத்துவதை கண்ட ஆட்டோவில் இருந்தவர்கள், சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து சிறுமியை மீட்ட காவல்துறையினர், தப்பிச்சென்ற மூவரையும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உண்மையில் சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது விருப்பப்பட்டு ஆட்டோவில் சென்றாரா? என்பது ஆட்டோவில் சென்றவர்களை கைது செய்த பின்னரே தெரிய வரும் எனவும் தற்போது இதனை கடத்தல் வழக்கு கோணத்தில் விசாரித்து வருவதாகவும் தாம்பரம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.