சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் 2025-ல் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களை மாவட்ட வாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மூன்றாம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களை நியமனம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குநர் மு. பழனிசாமி, காஞ்சிபுரத்திற்கு மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் த.உமா, திருவள்ளூரில் தொடக்கக் கல்வி இயக்ககம் இயக்குநர் நரேஷ், கோயம்புத்தூரில் கூடுதல் மாநில திட்ட இயக்குநர் ச. உமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், பணியாளர் தொகுதி இணை இயக்குநர் த.ராஜேந்திரன் திருச்சி மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அய்யண்ணன் வேலூர் மாவட்டத்திற்கும், பள்ளிக் கல்வி இயக்ககம் இணை இயக்குநர் ஞானகெளரி திருநெல்வேலி மாவட்டத்திற்கும், தனியார் பள்ளிகள் இயக்ககம் இணை இயக்குநர் ஆஞெலோ இருதயசாமி மதுரை மாவட்டத்திற்கு என மொத்தம் 35 மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.