சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கியுள்ளார். கடைசியாக அவர் ஒப்புக்கொண்ட ஒரு சில படங்களில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தார். விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு விஜய் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றபோது அவருக்கு அம்மாநில ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து விஜய் அங்குள்ள ரசிகர்களை வரவழைத்தது வாகனத்தின் மீதேறி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் மலையாளத்தில் ஒரு சில வார்த்தைகளை கூறி உரையாடினார்.
இந்த நிலையில், விஜயை எப்படியாவது நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என கேரளா ரசிகர் ஒருவர் பாலக்காட்டில் இருந்து நடைபயணமாக நீலாங்கரை நோக்கி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த மங்கள டேம் என்ற பகுதியில் வசித்து வருபவர் உன்னி கண்ணன். இவர் தவெக தலைவரும், நடிகருமான விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.
இந்நிலையில் இவர் இன்று (பிப்.4) செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சாலை வழியாக விஜயின் புகைப்படங்களை கழுத்தில் தொங்குவிட்டபடியும், கையில் ஏந்திய படியும் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: மெரினா, பெசன்ட் நகர் பீச்சில் டோல்கேட் முறையில் கட்டணம்: என்ன சொல்கிறது சாத்தியக்கூறு ஆய்வறிக்கை?
அப்போது அவர் கூறுகையில், '' விஜயை காண பலமுறை பேருந்தில் சென்று முயற்சித்தும் தன்னால் சந்திக்க முடியவில்லை. எனவே கடந்த ஜனவரி 1ம் தேதி கேரளாவில் இருந்து புறப்பட்ட நான் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டை நோக்கி நடைபயணமாக சென்று கொண்டிருக்கிறேன். எப்படியாவது நான் விஜயை இம்முறை சந்திக்க வேண்டும். நான் உயிர் வாழ்வது, சாப்பிடுவது எல்லாமே நடிகர் விஜயால் தான்'' என்றார்.
தொடர்ந்து உன்னி கண்ணன், தான் ஒரு கேரள நடிகர் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து விஜயின் படங்களில் இடம் பெற்ற பல்வேறு வசனங்களை பேசி காட்டி அசத்தினார். மேலும் கேரள மக்கள் எந்த அளவுக்கு தனக்கு ஒத்துழைப்பு அளித்தார்களோ அதே அளவிற்கு தமிழ்நாட்டு மக்களும் என்னை வரவேற்று ஒத்துழைப்பு அளித்தனர்." எனவும் அவர் கூறினார்.