மதுரை: திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு இன்று (பிப்.4) ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் நேற்று காலை 6 மணி தொடங்கி இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், 144 தடை உத்தரவை திரும்ப பெற்று போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்து அமைப்பினர் உய ர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த பல நிபந்தனைகளோடு அனுமதி வழங்கினர்.
இதனை தொடர்ந்து, இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், பாஜகவினர் என 3000க்கும் மேற்பட்டோர் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
எச்.ராஜா ஆவேசம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, '' அறுபடை வீட்டின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தை கூறு போட நினைக்கும் இந்து விரோத, தமிழர் விரோத தீய சக்தி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் தான் இந்துக்கள் இந்தியாவில், தமிழ்நாட்டில் வாழ முடியும்.
இதையும் படிங்க: பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: "கலவரமும், வன்முறையும் கூடாது என அமைதியாக இருக்கிறோம்" - வைகோ சாடல்!
காவல்துறை நிர்வாகம், அமைச்சர் மூர்த்தி அண்ணா சிலைக்கு மாலை போட ஊர்வலமாக சென்றதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அரசியல் சட்டத்தின் எதிரியாக தமிழ்நாடு காவல் துறை செயல்படுகிறது. 144 தடை உத்தரவு இருக்கும்போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாகச் சென்று மாலை போடலாம், இந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதா?.
ஆகவே, தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு 2026 இல் சரியான பதில் அளிப்பார்கள். 75 முறை போராடி தான் ராமஜென்ம பூமி மீட்கப்பட்டது. இந்த அரசுக்கு எதிராக இந்துக்கள் தொடர்ந்து போராடுவார்கள். திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தம்; இந்து மக்களுக்கு சொந்தம், யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம். இஸ்லாமியர்கள் இந்துக்களோடு சகோதரத்துவத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறார்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு ஒரே வழி எப்படி ராமஜென்ம பூமி வேறு இடத்தில் அமைக்கப்பட்டதோ அதேபோல திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று எச்.ராஜா வலியுறுத்தினார்.