சென்னை:உலக மயோபியா விழிப்புணர்வு வாரம் மே 22 முதல் 26 வரை கொண்டாடப்படுகிறது இதில் பல்வேறு கண் மருத்துவர்கள் மயோபியா நோய் பற்றியும் இந்தியாவில் அதன் பாதிப்பு வரும் காலத்தில் மோசமாக இருக்கப்போவதையும் கணித்துள்ளனர்.
மயோபியா என்பது கிட்டத்து பார்வை குறைபாடு என அறியப்பட்டு வருகிறது அதாவது அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும் ஆனால் தூரத்தில் உள்ளவை மங்கலாக தெரியும் நோயாகும். கணினி, செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிர்ச்சிதரும் தரவுகள்: 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் 5-15 வயதுடைய குழந்தைகள், மூன்று பேரில் ஒருவர் வீதம் மயோபியாவால் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் பாதிப்பு அளவு இரட்டிப்பு அடைந்து இருவரில் ஒருவருக்கு மயோபியா ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
பாதிப்பு அதிகரிக்கும் நிலை:கணித்தவர்கள்கூறும்தகவல் படி இந்தியாவில், 1999 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் மயோபியாவின் தாக்கம் நகர்ப்புற குழந்தைகளிடையே மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 1999 -இல் 4.44 சதவீதத்தில் இருந்து 2019-இல் 21.15 சதவீதமாக பாதிக்கப்படுவோர் சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 0.8 சதவீதம் பாதிப்பு அதிகரித்திருப்பதன் அடிப்படையில், நகர்ப்புற குழந்தைகளிடையே மயோபியாவின் பாதிப்பு 2030-இல் 31.89 சதவீதமாகவும், 2040இ-ல் 40 சதவீதமாகவும், 2050-இல் 48.1 சதவீதமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஸ்மித் எம் பவாரியா, (அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தானே, மும்பை)
காரணங்கள்: இந்தியாவில் மயோபியா பாதிப்பு குறித்த பல ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின் படி மயோபியாவின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாக இருக்கின்றது என கண் மருத்துவர் மஹிபால் சிங் கூறினார். இதற்கு காரணம் இயற்கையாக பூமியில் விழும் ஒளியை விட தேவையற்ற தொழில்நுட்ப சாதனங்களின் ஒளியை(திரை) அதிக நேரம் பார்ப்பதால் என்கிறார். இவ்வாறு அதிக நேரம் திரையை கண்கள் பார்ப்பதால் விழித்திரை மற்றும் நரம்புகள் அதிக அழுத்ததிற்கு உள்ளாகிறது, இதன் விளைவாக படிப்படியாக தூரத்தில் உள்ளவை மங்கலாகிறது என்கிறார். மேலும் இது மரபணு வாயிலாக அடுத்த தலைமுறையினருக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கிறார்.
அறிகுறிகள்: மயோபியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மங்கலான பார்வை, தொலைதூரப் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம், கண் சோர்வு, தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படுவது வழக்கம். இவ்வாறு அறிகுறிகள் குறிப்பாக கணினி, செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு தோன்றினால் அது மயோபியா ஏற்படுவதன் அறிகுறிகள் ஆகும். இதை சரி செய்ய தற்காலிக வழிகளே உள்ள நிலையில் கண்ணுக்கு கண்ணாடி அணிவது மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதே தீர்வாகிறது என்கிறார் டாக்டர். ஸ்மித் எம் பவாரியா.
விழிப்புணர்வு: மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கண் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் செல்போன், கணினி பயன்படுத்துவதை விட்டு வெளியில் சென்று விளையாடுவதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க:புற்று நோய் வந்தால் ஆண்குறியை வெட்டி அகற்ற வேண்டுமா? இந்தியர்களை அச்சுறுத்தும் ஆண்குறி புற்றுநோய் - மருத்துவரின் விளக்கம்