சென்னை: தேசிய குழந்தைகள் நல மருத்துவப் பரிசோதனை திட்டம் கீழ், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 4 லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வ விநாயகம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதிலும், தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது.
தேசிய குழந்தைகள் நல மருத்துவப் பரிசோதனை திட்டம்:
ஆனாலும், குழந்தைகள் நோய்வாய்ப்படுதல் மற்றும் உயிரிழப்பதை முற்றிலும் தடுக்க, ஆரம்ப நிலையில் பாதிப்புகளைக் கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது அவசியம் உள்ளது. அதன் அடிப்படையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் 30 வகையான பாதிப்புகள் உள்ளனவா? என்பதை தொடக்கத்தில் கண்டறியும் தேசிய குழந்தைகள் நல மருத்துவப் பரிசோதனை திட்டம் (RBSK- Rashtriya Bal Swasthya Karyakram) தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனைகளின் மூலம், பிறவியிலேயே உள்ள பாதிப்புகள், பிறந்த பிறகு ஏற்படும் குறைபாடுகள், நோய்கள், வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றன. அதன்படி, ஆண்டுதோறும் 1 கோடியே 45 லட்சம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு பள்ளிகளிலேயே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 4 லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஊசி, ரத்தம் இல்லாமல் சர்க்கரை அளவை சரிபார்க்கும் புது டெக்னாலஜி..விரைவில் அறிமுகம்!
இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், வாகன ஓட்டுநர் ஆகியோர் அடங்கிய 805 மருத்துவக் குழுவினர், பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் அனைவரும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். மேலும், தகவல் ஒருங்கிணைப்பை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், மருத்துவத் துறையினரிடம் மேற்கொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் விவரங்களை, மாதந்தோறும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், கல்வித் துறை இணை இயக்குநர்களுக்கு அனுப்ப வேண்டும். மருத்துவப் பரிசோதனையில் குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதுகுறித்த விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முழுமையான உடல் பரிசோதனை மேற்கொண்டு, அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அக்குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் செயல்பாடுகளும், பள்ளி மாணவர்களுக்கான உடல் நலன் திட்டமும் முறையாக செயல்படுவதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு என அதில் கூறப்பட்டுள்ளது.