சென்னை: தமிழ் மொழி மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழி எனவும், அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஐஐடி மாணவர்கள் தயாரித்து வரும் மொழி பெயர்ப்பு செயலி மூலமாக இனிவரும் காலங்களில் மொழி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 16-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி துவக்க விழா நேற்று (பிப்.8) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றுத் தொடங்கி வைத்தார். அப்போது, இந்நிகழ்வில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த பழங்குடி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுமட்டுமின்றி பழங்குடியினர் பாட்டுக்கு மாணவர்களுடன் ஒன்றாக இணைந்து ஆளுநர் நடனமாடின நிகழ்வும் நடந்துள்ளது.
அதனையடுத்து, கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களின் எதிர்கால கனவுகள் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது, தமிழ் மொழியைக் குறித்து கேள்வி கேட்ட கல்லூரி மாணவிக்கு, பதில் அளித்த ஆளுநர், "தமிழ் மொழி மிகத் தொன்மையான, பழமை வாய்ந்த மொழி. ஒவ்வொருவரும் தமிழ் மொழியில் பத்து வார்த்தைகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும்" எனப் பதில் கூறினார்.
'மை பாரத்' - நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்த 16-ஆவது பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி துவக்க விழாவில் பேசிய ஆளுநர் ரவி அவர்கள், இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கவும், இன்று கிடைக்கும் முன்னெப்போதுமில்லாத வாய்ப்புகளை முழுமையாகப்… pic.twitter.com/qT41LOS5OB
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 8, 2025
தொடர்ந்து, அரங்கத்தில் ஒரு மாணவன், "நான் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன்" எனக் கூறினான். அதற்கு ஆளுநர் நீங்கள் ஏன் அரசியல்வாதியாக விரும்புகிறார்கள்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த மாணவன், "தற்போது எங்கள் கிராமங்களில் போதிய அளவுக்கு வளர்ச்சி இல்லை. ஆகையால் நான் எதிர்காலத்தில் அரசியல்வாதி ஆனால், என் மக்களுக்கும் என் கிராமத்திற்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்" என்று பதிலளித்தார்.
"நான் படிக்கும் காலத்தில் மின்சார வசதியும் இல்லை. எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று தான் பள்ளிப் படிப்பை படித்ததாகவும், அப்பொழுது நாடு பெரிதாக வளர்ச்சியடையவில்லை. ஆனால் தற்போது கிராமங்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கிறது என்ற ஆளுநர், யாரெல்லாம் மருத்துவராக வேண்டும் என விருப்பப்படுகிறீர்கள் என கேள்வியெழுப்ப ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மாணவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன்" எனப் பதிலளித்தார்.
அதற்கு, தற்போது என்ன படிக்கிறீர்கள்? என ஆளுநர் கேட்டதற்கு தற்போது பொறியியல் படித்து வருவதாகவும், நீட் தேர்வு முதல் முறையாக எழுதி தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது பொறியியல் படிக்கிறேன் எனவும், ஆனால் மருத்துவர் ஆவது என்பது எனது இலக்கு. ஆகையால் நீட் தேர்வு ஆன்லைன் மூலமாகப் படித்து வருகிறேன் எனவும் அந்த மாணவன் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: “நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், "நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்றால் நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியும் முக்கியமானது. அந்த வகையில் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. பழங்குடியின மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்கிறது. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்வின் மூலமாக மாணவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். நம் நாட்டில் உள்ள கலாச்சாரங்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி அனைவரையும் சென்று அடைந்துள்ளது. ஐஐடி மாணவர்கள் செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் உலகில் எந்த மொழியிலிருந்து தொலைப்பேசியில் பேசினாலும் நம் தாய் மொழியில் மொழிபெயர்க்கக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.
நீங்கள் அங்கு செல்லும்போது அங்குள்ள தொழில்நுட்ப வசதிகளை பார்வையிட்டு நீங்களும் எதிர்காலத்தில் சாதிக்க உத்வேகமளிக்கும். தற்போது ஐஐடி மாணவர்கள் தயாரித்து வரும் இந்த மொழி பெயர்ப்பு செயலி மூலமாக இனிவரும் காலங்களில் மொழி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு இரண்டு தாரக மந்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று கடின உழைப்பு, மற்றொன்று பெரிய கனவு காண வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.