சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், தற்போது அவற்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி இன்று (ஜனவரி 05) ஞாயிற்றுக்கிழமை, தனது 57- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி, சென்னை சித்தரஞ்சன் சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
இதில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது தங்கை கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து கனிமொழி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலைமைச்சர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
இன்று, எனது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் - அண்ணன் தளபதி அவர்கள் மற்றும் அண்ணி இருவரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். pic.twitter.com/sbq5CHBPC8
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 5, 2025
முன்னதாக, கனிமொழியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் கனிமொழியின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரானார் பெ.சண்முகம்.. முதல் ஆளாய் வாழ்த்திய விஜய்!
அந்த சுவரொட்டியில், “முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மற்றும் தந்தை பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடம் திமுக எம்பி கனிமொழி செல்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், Way to 2026” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்த சுவரொட்டிகள் பேசும் பொருளாக மாறியுள்ளது. 10 வருடத்திற்கு மேல் அரசியல் அனுபவம் உள்ள கனிமொழிக்கு, மாநில அரசியலில் இதுவரை உரிய இடம் தரப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், விரைவில் மாநில அரசியலை நோக்கி கனிமொழி வருவார் என்ற நோக்கத்தில் சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.