சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புனாய்வு குழு (SIT) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பான வழக்கு மற்றும் இந்த வழக்கு குறித்தான முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், போலீசார் விசாரணையில் ஞானசேகரன் இதற்கு முன்பே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரவில் கொள்ளை, பகலில் பிரியாணி கடை....ஞானசேகரனின் இரட்டை வாழ்க்கை குறித்து போலீஸ் விசாரணை!
இந்த நிலையில், நேற்று (ஜனவரி 04) சனிக்கிழமை, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், அவரது வீட்டிலிருந்து பல்வேறு ஆவணங்கள், லேப்டாப்கள்(laptops), பென்டிரைவ் (Pendrive ) உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது, இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் கொடுத்த பரிந்துரை அடிப்படையில், போலீசார் ஞானசேகரன் மீது குண்டர் சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர். குறிப்பாக, ஞானசேகரன் மீது கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 2018 ஆம் ஆண்டு துப்பாக்கியோடு கைது செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.